தஞ்சாவூர்: டூவீலர் மீது லாரி மோதி விபத்து - தாய் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் பலியான சோகம்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷாஜாலி. இவரது மனைவி பெனாசிர் பேகம் (26). இவர் தனது மகன்கள் முகமது ஜாவீத் (12), முகமது ஜாசித் (10) , முகமது ஹாலித்(5) ஆகியோருடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார்.
கண்டியூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக ஹாரன் எழுப்பியபடியே வேகமாக வந்ததுடன், பெனாசிர் பேகம் டூவீலர் மீது லேசாக மோதி விட்டதாக சொல்கிறார்கள். இதில் நிலைத்தடுமாறி டூவீலரை ஓட்டியிருக்கிறார் பெனாசிர் பேகம். அப்போது எதிரே வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி டூவீலர் மீது மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதில் பெனாசிர் பேகம் அவரது குழந்தைகள் முகமது ஜாசித் , முகமது ஹாலித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த முகமது ஜாவீத் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலறிந்த நடுக்காவேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் கண்டியூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


