`முகத்தை பொலிவாக்கும்- ஆன்லைனில் வாங்கிய அழகு கிரீமால் மாணவியின் சிறுநீரகம் பாதிப்பு.. நடந்ததென்ன?
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அரீக்கோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து ஃபேர்னஸ் கிரீமை ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தியதால் தீவிர சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
துபாயில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த கிரீமை, 30 கிராம் ரூ.700 என்ற விலையில் ஆன்லைன் மூலம் வாங்கி சுமார் ஒரு வருடமாக அம்மாணவி பயன்படுத்தியுள்ளார். சமூக வலைதளப் பிரபலங்கள் பலரும் இதற்கு விளம்பரம் செய்ததை நம்பி அவர் இதனை வாங்கியுள்ளார். இந்நிலையில், மாணவிக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டு உடல் முழுவதும் வீக்கம் கண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சைக்கு இடையே ரத்த அழுத்தம் குறைந்து சுயநினைவையும் இழந்தார். அரீக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர பரிசோதனையில், பாதரச விஷத்தன்மை காரணமாக மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி எனப்படும் தீவிர சிறுநீரக நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மாணவி பயன்படுத்திய கிரீமை சென்னையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் 1 பி.பி.எம் அளவு மட்டுமே இருக்க அனுமதி உள்ள நிலையில், அந்த கிரீமில் 1.25 சதவீதம், அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக பாதரசம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அம்மாணவி நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இதேபோல, கேரளாவில் உள்ள பிரபல கடை ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாகிஸ்தான் தயாரிப்பு பாடி கிரீமில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 20,000 மடங்கு அதிக பாதரசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூலமாகவும் இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட கிரீம்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முகம் வெள்ளையாக வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் தரமற்ற அழகுசாதனப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியூட்டும் உதாரணமாகியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அதிக அளவு பாதரசம் கலந்த ஃபேஸ் கிரீம்களின் விற்பனையைத் தடுக்கவும், தீவிர சோதனை நடத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சோதனைகள் கடுமையாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆபரேஷன் சௌந்தர்யா என்ற பெயரில் நடத்திய சோதனையில் ரூ.9.94 லட்சம் மதிப்பிலான போலி அழகுசாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அழகுசாதனப் பொருள் களை வாங்கும்போது நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் உரிமம் ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே வாங்க வேண்டும் என்றும், புகார்கள் ஏதேனும் இருந்தால் 1800 425 318 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரீக்கோடு ஆஸ்டர் மிம்ஸ் மதர் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை மருத்துவர் எஸ். கௌரி கூறுகையில், "கிரீம்களில் உள்ள அதிகப்படியான பாதரசம் உடலுக்குள் சென்று மெதுமெதுவாக உயிரைக் கொல்லும் விஷமாக மாறுகிறது. இது சிறுநீரகத்தில் உள்ள நுண்ணிய வடிகட்டிகளைச் சேதப்படுத்தி, சிறுநீர் வழியாக அதிகப்படியான புரதம் வெளியேறும் நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் பாதிப்பை உருவாக்கும். மேலும் கை, கால் நடுக்கம், தசை பலவீனம், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் நரம்பு மண்டலத்தையும் கடுமையாகப் பாதிக்கும். சிகிச்சை தாமதமானால் சிறுநீரகங்கள் முழுமையாகச் செயலிழந்துவிடும். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவொரு அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது" என எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


