காதல் விவகாரத்தில் சந்தேகம்; பள்ளி மாணவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் 17 வயது மகள் செபத்தையாபுரத்தில் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். மாணவியுடன் முத்துராஜுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் பள்ளிப்படிப்பு முடிந்து, திருமண வயதை எட்டிய பிறகு திருமணம் தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அம்மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவந்துள்ளாராம். இதனால், முத்துராஜாவிடம் பேசுவதை சமீப காலமாக தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவியிடம், முத்துராஜ் நேரில் பேச பல முறை முயன்றும் அவர் பேசவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த முத்துராஜ், அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், மதியம் சுமார் 3 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு வந்த முத்துராஜ், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். பின்னர் மாணவியை மீட்டு அவசர சிகிச்சைக்காக செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிய நிலையில், அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாயர்புரம் காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அங்கிருந்து தப்பிய முத்துராஜ், விஷமருந்தி செபத்தையாபுரம் பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பிளஸ் 1 மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


