சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் : தினமும் மூன்று திருக்கோலங்களில் அருள்பாலிக்கும் அம்பிகை!
கேரளத்தில் உள்ள தேவி திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில். அம்பிகையின் அருளைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புகள், தீய சக்திகளின் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தை நாடி வருகிறார்கள். இந்தக் கோயிலின் பின்னணியில் பல புராணக் கதைகளும், செவிவழிச் செய்திகளும், வரலாற்று நம்பிக்கைகளும் நிறைந்திருக்கின்றன.
கேரளத்தில் 108 துர்காலயங்கள், 108 சிவாலயங்கள், 108 சாஸ்தா ஆலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் ஆகியவற்றைப் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாகக் கேரளத்தின் உற்பத்தி புராணங்கள் கூறுகின்றன. கேரளத்தின் பாதுகாப்புக்காகப் பரசுராமர் இத்தகைய ஆலயங்களை நிறுவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த 108 துர்காலயங்களின் பெயர்களையும் சிறப்புகளையும் எடுத்துரைக்கும் ஒரு துதிப்பாடல் கேரளத்தில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. மாலை வேளையில் விளக்கேற்றி, அந்தப் பாடலைப் பாடி வழிபடுவது ஒரு மரபாகத் தொடர்கிறது. இந்த 108 துர்காலயங்களில் முக்கியமான திருத்தலமாகச் சோட்டானிக்கரை விளங்குகிறது.
சோட்டானிக்கரை என்ற பெயருக்குப் பின்னாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஜோதி சொரூபமாக அம்பிகை காட்சி அளிக்கும் திருத்தலம் என்பதால், ஜோதியான கரை என்ற பெயர் மருவி சோட்டானிக்கரை என்றானதாகச் சொல்லப்படுகிறது.
பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயம்
ஆதியில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகையின் ஆலயமாகச் சோட்டானிக்கரை இருந்திருக்க வேண்டும் என்பது அங்குள்ள துதிப்பாடல்களின் மூலம் தெரியவரும் செய்தி. காலப்போக்கில் அந்தக் கோயில் மறைந்து, அதன் இருப்பிடமே தெரியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப் பகுதியில் கண்ணப்பன் என்ற வேடர் குலத் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள். மகள்மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த அவன், வனதேவதைகளைப் பிரீதி செய்வதற்காகப் பலி கொடுப்பது உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்து வந்தான்.
ஒருமுறை பலி கொடுப்பதற்காக ஒரு இளம் பசுங்கன்றைக் கொண்டு வந்தான். அதைப் பார்த்த அவனுடைய மகள், அந்தக் கன்றின் மீது அன்பு கொண்டு, அதைக் கொல்லக்கூடாது என்று தந்தையிடம் வாதிட்டாள். அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கன்றை வளர்க்கத் தொடங்கினான்.
உயிர்களைப் பலியிடுவது தவறு என்ற எண்ணத்தையும் அந்தச் சிறுமி தந்தையிடம் ஏற்படுத்தினாள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒருநாள் அந்தச் சிறுமி உடல்நலமின்றி இறந்துபோனாள். அவள் வளர்த்து வந்த கன்றும் காணாமல் போய்விட்டது.
இதனால் மனம் கலங்கிய கண்ணப்பன், அங்கிருந்த பெரியவர்களிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அப்போது, உயிர்களைப் பலியிடும் பாவத்திலிருந்து அவனைத் தடுத்து, நல்வழிப்படுத்துவதற்காகவே அம்பிகை பசுங்கன்றின் வடிவில் வந்து அவனுடைய மகளுக்கு வழிகாட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்ணப்பன் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைக் கைவிட்டு, முறையான வழிபாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினான் என்கிறார்கள்.
இதற்கிடையில், அந்தப் பகுதியில் புல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள், ஒரு பாறையில் அரிவாளைக் கூர்தீட்டியபோது அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செய்தி கண்ணப்பனிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே அங்கிருந்த பெரியவர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்து பிரச்னம் பார்த்தபோது, அந்தப் பாறையில் வெளிப்பட்டிருப்பது பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகையின் சைதன்யம் என்பது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அரசரின் துணையுடன் அந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது என்பது அங்கு வழங்கிவரும் செவிவழிச் செய்தியாகும்.
இந்த ஆலயத்தில் அம்பிகையின் திருமேனி வழக்கமான கற்சிலையாக இல்லாமல், பிரமாண்டமான ருத்ராட்ச வடிவில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் மீது கவசம் சாத்தப்பட்டிருக்கும். சதசத்திர கலசாபிஷேகம் நடைபெறும் நேரத்திலோ, அதிகாலை வேளையிலோ அந்தக் கவசம் இல்லாதபோது அம்பிகையின் உண்மையான திருவுருவத்தைத் தரிசிக்கலாம்.
போகாசாரியர், ஆதிசங்கரர், காகசேரி பட்டத்திரி, வில்வமங்கல சுவாமிகள் உள்ளிட்ட பல மகான்கள் இந்த அம்பிகையைத் தரிசித்துப் பூஜித்திருப்பதாகவும் ஆலய வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு சந்நிதிகளே இரண்டு கோயில்களாய்
சோட்டானிக்கரை ஆலயத்தில் மேல்காவு, கீழ்காவு என இரண்டு முக்கியமான சந்நிதிகள் உள்ளன. இரண்டுமே அம்பிகையின் சந்நிதிகள்தாம். மேல்காவு சந்நிதியில் ராஜராஜேஸ்வரி அல்லது துர்க்கை என்ற திருக்கோலத்திலும், கீழ்காவு சந்நிதியில் பத்ரகாளி என்ற திருக்கோலத்திலும் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.
இரண்டு சந்நிதிகளும் ஒரே ஆலய வளாகத்தில் அமைந்திருந்தாலும் தனித்தனிக் கோயில்களாகவே விளங்குகின்றன. முதலில் மேல்காவு அம்பிகையைத் தரிசித்துவிட்டு, பின்னர் கீழ்காவு சந்நிதிக்குச் சென்று தரிசிப்பது வழக்கம்.
இந்த ஆலயத்துக்கும் கொல்லூர் மூகாம்பிகைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு சுவாரசியமான ஐதிகம் கூறப்படுகிறது.

ஆதிசங்கரருக்கும் மூகாம்பிகைக்கும் உள்ள தொடர்பு
ஆதிசங்கரர் கொடஜாதிரியில் மூகாம்பிகையை நோக்கித் தவம் செய்தபோது, சரஸ்வதி சொரூபமாக விளங்கும் அம்பிகையைத் தன்னுடைய கேரள தேசத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அம்பிகையிடம் வேண்டினார்.
அம்பிகையும் அவருடன் வரச் சம்மதித்தாள். ஆனால், ஒரு நிபந்தனை விதித்தாள். தான் பின்னால் வருவதாகவும், ஆதிசங்கரர் ஒருபோதும் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் கூறினாள்.
அதன்படி ஆதிசங்கரர் முன்னால் செல்ல, அம்பிகை பின்னால் வந்துகொண்டிருந்தாள். அப்போது அம்பிகையின் கொலுசுச் சத்தம் திடீரென நின்றுவிட்டது. அம்பிகை வருகிறாளா என்பதை அறிய ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார்.
உடனே அம்பிகை, தான் மூகாம்பிகையை விட்டுப் பிரிந்து வரப்போவதில்லை என்றும், கொடஜாதிரியிலிருந்து இங்கே வந்திருப்பதால் இங்கேயே தங்கப்போவதாகவும் கூறினாள். அதேவேளை, ஆதிசங்கரரின் வேண்டுகோளுக்கு இணங்க, சோட்டானிக்கரையிலும் எழுந்தருளி அருள்புரிவதாக வாக்குக் கொடுத்தாள் என்பது ஐதிகம்.
இதன் காரணமாகவே மூகாம்பிகைக்கும் சோட்டானிக்கரைக்கும் ஒரே மாதிரியான சக்தி மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் இருப்பதாகப் பக்தர்கள் கருதுகிறார்கள். மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோட்டானிக்கரையில் அதிகாலையில் அம்பிகை சரஸ்வதி அம்சமாகவும், நண்பகலில் லட்சுமி அம்சத்துடனும், மாலையில் துர்கை அம்சத்துடனும் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. மூகாம்பிகையிலும் இதேபோன்ற முத்தேவியர் தத்துவம் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது.
இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய சோட்டானிக்கரை திருக்கோயிலின் மகிமைகளை விளக்கும் பல நம்பிக்கைக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றையும் அறிவோம்.
மகிமைகள் தொடரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


