200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர்.

புதிதாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்குக் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி டில்லான் இந்த மிரட்டலை சமூக வலைத்தளம் மூலம் விடுத்து இருக்கிறான்.

அந்தப் பதிவில், சமீபத்தில் விகாஸ் தாக்கூர் மற்றும் தீபக் சிங் ஆகியோரைக் கைது செய்து இருப்பது எங்களது திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மும்பையில் எங்களது கூட்டாளிகள் சுமார் 200 பேர் செயல்பாட்டிற்குத் தயாராக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகப் பேசுபவர்களை மிரட்டியுள்ள அவன், குறிப்பாக அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் புல்லட் புரூஃப் (குண்டு துளைக்காத) கண்ணாடியைப் பயன்படுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்கள் எத்தனை குண்டு துளைக்காத அறைகளைக் கட்டினாலும், சுட்டுக் கொல்லப்படுவார்கள்," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

அதோடு 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களைக் குறிப்பிட்ட தில்லான், அந்த வன்முறைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளான்.

இந்தப் பதிவு குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அது கோல்டி டில்லான் அனுப்பினானா என்பதை போலீஸார் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு பேரை சனிக்கிழமை அன்று கைது செய்தது. அவர்கள் பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த விகாஸ் தாக்கூர் (எ) விக்கி மற்றும் பஞ்சாபின் தர்ன் தரனைச் சேர்ந்த தீபக் சிங் (எ) தீப் எனத் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் இல்லமான ஜல்சாவுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தக் கைது நடவடிக்கைகளின் மூலம், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு சதித்திட்டமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை அமிதாப்பச்சனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அமிதாப்பச்சன் இல்லமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.