விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நேற்று விளையாடச் சென்றனர்.
அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது 14 வயது மகன் ராஜா என்பவரும் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பிறகு நேற்று இரவு மூவரும் வீட்டிற்கு திரும்பவில்லை.
அதனால் பதற்றமான அவர்களின் பெற்றோர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்களிடம் தங்கள் பிள்ளைகள் குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர்கள் மூவரும் தோட்டப்பாடி ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றதாக அவர்கள் தெரிவிக்க, ஏரிக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள்.
அங்கு சிறுவர்கள் இல்லாததால், சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக சிறுவர்கள் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்பட்ட தோட்டப்பாடி ஏரியில், தீயணைப்பு வீரர்களின் துணையுடன் ஆய்வு செய்தனர்.
அப்போது மாயமான மூன்று சிறுவர்களும் ஏரியில் சடலங்களாக மிதந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், அவர்களை மீட்டனர். தங்கள் பிள்ளைகளை சடலமாகப் பார்த்த பெற்றோர்கள் கதறித் துடித்தனர்.
தொடர்ந்து சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

