மேகதாது அணை: நாளை டெல்லி செல்லும் விஜய்; காங்கிரஸ் தலைமையிடம் பேசுங்கள் - பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைமையிடம் பேசுமாறு வலியுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தளப் பதிவு...

"மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் அவர்கள் மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை - மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகவின் உரிமை, - அணை கட்டுவது எங்கள் உரிமை என்று தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக - கர்நாடக மக்களிடையே ஒரு வேற்றுமையை உண்டாக்கும் விதமாக ஒரு மாநில முதலமைச்சர் இவ்வாறு பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்னையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது.

நதிகள் தேசிய சொத்து

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

• பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

•உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை.

சட்டத்தை மதிப்பவர் போல் பேசும் சிவகுமார்

ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார்.

தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளைத் தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு நமக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில்லை.

தற்போது மேட்டூர் அணைக்கு வரும் மழைநீரையும், வெள்ள உபரிநீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தற்போது பேசி வருகிறார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயப் பணிகளுக்கும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி திகழ்கிறது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்குநீரை வாதாடி பெறாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் பேச வேண்டும்

இந்நிலையில் மேககாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன், 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் கேள்விக்குறியதாகிவிடும் நிலை ஏற்படும்.

நாளை டெல்லி செல்லும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் திரு.விஜய் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திருமதி.சோனியா‌ காந்தி, திரு.ராகுல் காந்தி மற்றும் திரு.மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தமிழகத்திற்கு எதிராக பொது வெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி,

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வபோது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைபடுத்த அழுத்தம் தரவேண்டும் என்று முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.