மதுரை காவல்நிலையத்தில் மர்ம மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், ஏலக்காய் மூட்டைகள் தொடர்பான புகாரில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று (14ஆம் தேதி) அதிகாலை காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு மூன்று காவலர்களுக்கும் சிபிசிஐடி சம்பன் அனுப்பப்பட்டு நாளை விசாரணை ஆனது நடைபெற உள்ளது.

இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் உடலில் கழுத்து, முதுகு, நெற்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள அவர்கள், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்  போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி குடும்பத்தினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால். அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பாலகிருஷ்ணன்

தொடர்ந்து திருமங்கலம் கோட்டாட்சியர் பொன் ரதியும் காவல்துறையினரும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நிவாரணமாக அரசு வழங்கிய 3 லட்சம்  காசோலை குடும்பத்தினர் வாங்க மறுத்து எங்களுக்கு நிதி வேண்டாம் நீதி தான் வேண்டும் எனக் கூறி தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் மாட்டோம், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.