நிதியை நிறுத்திய SAI; பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பாய் - திணறும் பேட்மிண்டன் வீரர்கள்! என்ன பிரச்னை?
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI - Badminton Association of India) இடையே வீரர்களின் போட்டிப் பயணத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட நிர்வாக மோதலால், பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 2026 அக்டோபர் 6 முதல் நவம்பர் 1 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற நான்கு சர்வதேசப் போட்டிகளுக்கான பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை வீரர்களே சொந்தப் பணத்திலிருந்து ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிதி நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன?
பின்லாந்தில் நடந்த ஆர்டிக் ஓபன் போட்டி தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் நிதி உதவி கிடைக்காது என்ற தகவல் வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கான முன்மொழிவை BAI உரிய காலத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதே SAI தரப்பு விளக்கமாக உள்ளது.
முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு 90 நாள்களுக்கு முன்பே வீரர்களின் பெயர்கள் இல்லாத முன்மொழிவையும், 60 நாள்களுக்கு முன்பு வீரர்களின் பெயர்களுடன் கூடிய பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்ததாக SAI அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர், கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அந்தக் காலக்கெடு 30 நாள்களாகக் குறைக்கப்பட்டதாகவும், அதற்குள்ளும் BAI வீரர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், BAI தரப்பில் இதற்கு நேர்மாறான விளக்கம் முன்வைக்கப்படுகிறது. போட்டிகளுக்கான பயண விவரங்களை முன்கூட்டியே அனுப்பியிருந்தாலும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தாமதமாகக் கிடைத்ததால் நிதி ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு அமைப்புகளும் மாறி மாறிப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதால், இந்த நிர்வாக மோதலின் முழுமையான பின்னணி இன்னும் தெளிவாகவில்லை.
பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கிய வீரர்கள்
பின்லாந்தில் நடந்த முதல் போட்டிக்கான தங்குமிடச் செலவை மட்டும் BAI ஏற்றுக்கொண்டது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளுக்கான விமானப் பயணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் வீரர்களே சமாளிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக, டென்மார்க் ஓபனில் ஆறு பேரும், பிரெஞ்சு ஓபனில் ஏழு பேரும், ஹைலோ ஓபனில் ஒன்பது பேரும் போட்டிகளிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில், சில வீரர்கள் தங்களுடைய பயிற்சியாளர்களைக்கூட உடன் அழைத்துச் செல்லவில்லை. டென்மார்க் ஓபனில் காலிறுதிவரை முன்னேறிய தன்வி சர்மா பயிற்சியாளர் இல்லாமலேயே விளையாடினார். பிரெஞ்சு ஓபனில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியை வீழ்த்திய அஷ்மிதா சாலிஹாவுக்கு, சக வீராங்கனை இஷாராணி பருவா பயிற்சியாளர் இருக்கையில் அமர்ந்து ஆலோசனைகளை வழங்கினார்.

சிந்து எழுப்பிய நியாயமான கேள்வி
இந்த நிதிப் பிரச்சனை குறித்து நவம்பர் 3-ம் தேதி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பி.வி.சிந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளின் பரிசுத்தொகையில் இருக்கும் பெரிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே வெளியேறும் வீரருக்குக் கிடைக்கும் பரிசுத்தொகையுடன் ஒப்பிடும்போது, பேட்மிண்டன் போட்டிகளில் கிடைக்கும் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய பயணச் செலவுகளைச் சமாளிக்க ஸ்பான்சர்கள் மற்றும் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் (OGQ) அமைப்பின் உதவி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அடுத்த சிந்துவாகவோ லக்ஷயா சென்னாகவோ உருவாக வேண்டும் என்று கனவு காணும் 18 வயது இளம் வீரரின் நிலை என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வென்ற கோப்பைகள்
நிர்வாகச் சிக்கல்களுக்கு மத்தியிலும் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபனில் இந்தியாவுக்கு இரட்டை வெற்றி கிடைத்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் க்ஜேர்ஸ்ஃபெல்ட்டை வீழ்த்தி பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜொனாட்டன் கிறிஸ்டியை வீழ்த்தி சாம்பியனானார். இருவரும் தலா 37,500 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையைப் பெற்றனர்.
இதற்கிடையே, அடுத்தடுத்த போட்டிகளுக்கான நிதி உதவி மீண்டும் வழங்கப்படும் என்றும், ஐரோப்பியப் பயணத்தின்போது வீரர்கள் ஏற்கெனவே செய்த செலவுகளுக்குத் திருப்பித் தொகை வழங்கப்படாது என்றும் SAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விளையாடி கோப்பைகளை வென்றிருந்தாலும், இந்த விவகாரம் எழுப்பும் முக்கியமான கேள்வி, நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான மோதலுக்கான விலையை வீரர்களே ஏன் செலுத்த வேண்டும்? என்பது தான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


