Doctor Vikatan: கான்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிவிட்டால், அது கண்களுக்குள் புதைந்துவிடுமா?

Doctor Vikatan: நான் கடந்த சில வருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறேன்.  சில நாள்களில் லென்ஸை கழற்றவே மறந்துவிடுகிறேன்.  திடீரென நினைவு வந்து அகற்றுவேன். இப்படி ஒருவேளை லென்ஸை அகற்ற மறந்துவிட்டால், அது கண்களுக்குள் புதைந்துவிடுமா... பார்வையில் பாதிப்பு வருமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

கான்டாக்ட் லென்ஸைப் பொறுத்தவரை, வழக்கமாக அதைத் தினமும் காலையில் அணிந்துவிட்டு, இரவில் கண்டிப்பாகக் கழற்றிவிட வேண்டும். தற்போது பல்வேறு வகையான கான்டாக்ட் லென்ஸ்கள் கிடைக்கின்றன. புதிதாக எக்ஸ்டெண்டடு வியர் லென்ஸ் (Extended wear lens) அதாவது நீண்ட நேரம் அணியக்கூடிய லென்ஸ்) கூட வந்துள்ளது. இருப்பினும், ஒருவர் தூங்கச் செல்வதற்கு முன்பு கான்டாக்ட் லென்ஸைக் கழற்றிவிடுவதே எப்போதும் பாதுகாப்பானது.

ஏனெனில், இரவு முழுவதும் லென்ஸை அணிந்துகொண்டு தூங்கிவிட்டு காலையில் எழும்போது, கண் சிவத்தல் (Redness), கண்ணில் நீர் வடிதல் (Watering), மற்றும் போட்டோஃபோபியா (Photophobia) பாதிப்பு, அதாவது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், கான்டாக்ட் லென்ஸால் கண்களில் நோய்த்தொற்று (Infection) ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு, இரவு தூங்குவதற்கு முன்பு கான்டாக்ட் லென்ஸைக் கழற்றி வைப்பதே  நல்லது. ஒருவேளை நீங்கள் லென்ஸை அகற்ற மறந்துவிட்டு  தூங்கிவிட்டால், மறுநாள் காலையில் எழுந்தவுடன் கண் சிவந்து போவது, நீர் வடிதல் அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக லென்ஸைக் கழற்றிவிட வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டு தூங்குவதால் என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்று தெரிந்துகொள்வது அவசியம். 

கான்டாக்ட் லென்ஸ்

ஹைபாக்ஸியா (Hypoxia): லென்ஸ் அணிந்து தூங்கும்போது கண்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இதனால் கருவிழிக்கு (Cornea) ஆக்ஸிஜன் விநியோகம் குறைந்து ஹைபாக்ஸியா ஏற்படலாம்.

எடிமா (Edema): ஹைபாக்ஸியா காரணமாகக் கருவிழியில் நீர் கோத்து வீக்கம் (Fluid retention / Edema) ஏற்படலாம். இந்த வீக்கத்தினால் பார்வையின் தெளிவு (Visual clarity) குறையும்.

கெரடைட்டிஸ் (Keratitis): கண் சிவத்தல், கண் கூசுதல், நீர் வடிதல் ஆகியவற்றைத் தவிர, கெரடைட்டிஸ் எனப்படும் மிகவும் ஆபத்தான பாதிப்பும் ஏற்படலாம். கெரடைட்டிஸ் என்பது கருவிழியில் ஏற்படும் நோய்த்தொற்றுஆகும். இது பாக்டீரியா அல்லது பூஞ்சை (Bacterial or fungal keratitis) மூலம் ஏற்படலாம். இது முற்றிப்போனால் கருவிழியில் புண் (Corneal ulcer) ஏற்பட்டு, சில சமயங்களில் பார்வை இழப்பு (Blindness) வரை கூடக் கொண்டு செல்லலாம்.

சில சமயங்களில் கார்னியல் அப்ரேஷன்ஸ் (Corneal abrasions) ஏற்படலாம். அதாவது நம் நகம் போன்றவை பட்டுக் கருவிழியின் மேல் படலத்தில் சிராய்ப்புகள் (Epithelial defect) உண்டாகலாம்.
நீண்ட நாள் உபயோகம், கருவிழியில் புண் (Corneal ulcer)  ஏற்படலாம்.

கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள்ளேயே புதைந்துவிடுமா?

சில சமயங்களில் கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள்ளேயே நகர்ந்து மறைந்துவிட (புதைந்துவிட) வாய்ப்புள்ளது.  அது மிகவும் மென்மையான பொருளால் ஆனது என்பதால் கண்ணுக்குள் எளிதாக நகர்ந்து செல்லக்கூடும். 

கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள் எங்காவது போய்விட்டால், தயவுசெய்து கண்களைக் கசக்கக் கூடாது. உடனே உங்கள் கண் மருத்துவரைச் சென்று பாருங்கள்.

அப்படி கான்டாக்ட் லென்ஸ் கண்ணுக்குள் எங்காவது போய்விட்டால், கண்களைக் கசக்கக் கூடாது. உடனே உங்கள் கண் மருத்துவரைச் சென்று பாருங்கள். கண் இமைகளின் மேல் அல்லது கீழ் பகுதியில் (Conjunctiva) அந்த லென்ஸ் எங்காவது ஒட்டியிருக்கலாம். மருத்துவர் அதைப் பரிசோதித்து அழகாக வெளியே எடுத்துவிடுவார்.  கண்களைத் தேய்த்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

எனவே, இரவில் உங்கள் லென்ஸைக் கழற்றிவிட்டுத் தூங்குங்கள். ஏனென்றால், கான்டாக்ட் லென்ஸ் நமக்கு எவ்வளவு தெளிவான பார்வையைக் கொடுக்கிறதோ, அதே அளவிற்கு அதில் நிறைய பிரச்னைகளும் உள்ளன.



டாக்டர் விஜய் ஷங்கர்:

சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.