கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல் - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”கோவை மாவட்டத்தில் உள்ள 1,369 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கேக் வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம் விசாரணையில் இருக்கிறது. முறையான விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
முதலமைச்சர் விஜய் ஆட்சியில் மக்களின் வரிப்பணத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவோம். எங்கும் முறைகேடாகச் சென்று சேராது. கடந்த முறை சைக்கிள்களை எந்த விலையில் கொள்முதல் செய்தார்களோ, அதனைக் காட்டிலும் குறைந்த விலையிலேயே ஆர்டர் கொடுக்கப்படும். 5,32,000 சைக்கிள்கள் வினியோகம் செய்ய 277 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன்தான் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது நபருக்கு மட்டும் செல்லக்கூடிய டெண்டர் இல்லை. அதுமட்டுமின்றி சைக்கிள் டெண்டர் தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்குத் தரமான சைக்கிள்கள் வழங்கப்படும். கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலையில் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். முதல்வர் விருப்பப்படி அது ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிளாக இருக்கும். அதனுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்களும் வரும்” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


