`40% ஒட்டுக்கள் குறி - உ.பி.தேர்தலில் பட்டியலின கட்சியுடன் கைகோர்க்கும் அசாசுதின் ஒவைசி
உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாக அசாசுதின் ஒவைசி தெரிவித்து இருந்தார். ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி ஏற்கனவே மகாராஷ்டிரா உட்பட சில மாதங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது அக்கட்சி உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முழு அளவில் போட்டியிட தயாராகி வருகிறது. 2027ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் (கன்ஷி ராம்) கூட்டணி அமைக்க அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தயாராகி வருகிறது. பலசுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அசாதுதீன் ஓவைசி லக்னோவிற்கு வந்துள்ளார்.
இந்த கூட்டணி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த முயலும் ஒரு கட்சியையும், தலித் மக்களிடையே அரசியல் தளத்தை உருவாக்க முயற்சிக்கும் ஒரு கட்சியையும் ஒன்றிணைக்கிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு அப்பால் ஒரு மாற்று அணியை உருவாக்க இவர்கள் முயன்று வருகின்றனர். இக்கூட்டணி குறித்து உத்தரப்பிரதேச ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஷௌகத் அலி கூறுகையில்,தலித்துகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி எங்களை நிராகரித்துவிட்டனர்.
எனவேதான் எங்களது கட்சி ஆசாத் சமாஜ் பக்கம் திரும்பியது. உத்தரபிரதேசத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வராமல் இருக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அகிலேஷ் யாதவ் என்ன கனவில் வாழ்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை
. நான் பார்க்கிற வரையில், இந்த சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி 2017ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலில் போராடிய அதே கூட்டணிதான். தற்போதைய தேர்தலிலும் அதே முடிவுதான் அப்படியே இருக்கும்," என்று அலி கூறினார்.
ஆசாத் சமாஜ் கட்சி தலைவரான தலைவர் ஆசாத் இக்கூட்டணி குறித்து கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடனான கூட்டணி இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும். இரு கட்சிகளும் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஓட்டு திருட்டு போன்ற பிரச்சினைகள் நம் முன் உள்ளன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்து வருகிறோம், ஆனால் பெரிய கவலை என்னவென்றால், அரசு வேலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைக்காக போராடுகிறார்கள்," என்று ஆசாத் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் மேற்கண்ட இரண்டு கட்சியும் ஒரு சட்டமன்ற தேர்தலில் தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2022ம் ஆண்டு தேர்தலில் எ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 90 இடங்களில் போட்டியிட்டு அரை சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது. ஆசாத் சமாஜ் கட்சி 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி 0.13 சதவீத வாக்குகளைப் பெற்றது. யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் அர்பனில் போட்டியிட்ட ஆசாத், 8,000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசாத் நாகினா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் தோராயமாக 19 சதவிகிதம் உள்ளனர், அதே நேரத்தில் பட்டியல் சாதியினர் சுமார் 21 சதவிகிதம் உள்ளனர். இரண்டு சமூகங்களும் சேர்ந்து மக்கள்தொகையில் 40 சதவீதம் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வாக்கு வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

