அஜித் தோவல் மீது குற்றச்சாட்டு! அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் - இந்தியா என்ன சொல்கிறது?
கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய நீதிமன்றச் சம்மன் தற்போது இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணூன் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் சம்மன் ஆகும்.
என்ன பிரச்னை?
இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ (SFJ) அமைப்பின் சட்ட ஆலோசகரான பண்ணூன் இந்த வழக்கை நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (R&AW) முன்னாள் தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார் பண்ணூன். கொலைச் சதித் திட்டத்தில் இவர்களுக்கும் பங்குண்டு என்பது பண்ணூனின் குற்றச்சாட்டு.
எஸ்.எஃப்.ஜே அமைப்பை 2019-ல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இந்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நிகில் குப்தா...
பண்ணூன் வழக்கில் நிகில் குப்தா 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ப்ராக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த வழக்கில் கூலிக்கு ஆள் அமர்த்தி கொலை செய்ய முயன்றது, கொலை சதி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சதி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் குப்தா ஒப்புக்கொண்டார்.

இப்போது என்ன?
பண்ணூன் வழக்கு சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவுத் துறை 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று கையெழுத்திடப்பட்ட தூதரகக் குறிப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பியது.
பின்னர், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சம்மன் அனுப்பப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத் துறை அக்டோபர் 28-ம் தேதி உறுதிப்படுத்தியது.
இந்தியத் தூதரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தத் தூதரகக் குறிப்பை அனுப்பியது ஒருவித நடைமுறைதான்.
இந்தக் குறிப்பை அனுப்பியதன் மூலம், நடைபெற்று வரும் இந்த உரிமையியல் வழக்கில் தான் எந்தவொரு குறிப்பிட்ட நிலையையும் எடுக்கவில்லை என்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய அரசு என்ன சொல்கிறது?
அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்திய உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போலியான மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
அதேபோல், இந்த வீணான... அர்த்தமற்ற வழக்குகளையும் நாங்கள் ஏற்க மறுக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


