`அரசு அதிகாரியோ... சாதாரண பெண்ணோ... தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை..! - கனிமொழி சாடல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், ``அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. ஏன் இப்படி ஒரு பொய்யான தகவலை சோசியல் மீடியாவில் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி உண்மையாக நடைபெற்றிருந்தால் என்ன நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கட்டும். தவறான தகவலை பரப்புகிறார்கள். இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் எப்போதும் மக்கள் பணியை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவதூறு பரப்பியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.கனிமொழி, ``தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்றச் சம்பவங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது அல்லது புகார்களைப் பதிவு செய்யும்போது, அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வைக்கப் புகாரளித்தவர்கள் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

சென்ற ஆண்டு இப்படி இருந்தது, அதற்கு முந்தைய ஆண்டு இப்படி இருந்தது, இந்த ஆண்டு இப்படி இருக்கிறது என சட்ட ஒழுங்கு சீர்கேட்டை வளர்ச்சியைப் போல சித்தரிக்கும் போக்கில் பேசுகிறார் அமைச்சர். உண்மையான அக்கறை துளியும் இல்லை. நிலவும் பிரச்னைகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, அதைச் சரி செய்ய வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரிய துயரம்.
பிரச்னைகளுக்கான மூலக்காரணத்தைக் கண்டறிந்து தீர்வுகாண்பதை விட்டுவிட்டு, ஏதேனும் ஒரு சால்ஜாப்பைக் கூறித் தங்களை எவ்வாறு நியாயப்படுத்திக் கொள்வது என்பதில் மட்டுமே அவர்களின் முழுக் குறிக்கோளும் அமைந்திருக்கிறது.

ராஜ் மோகன்
ராஜ் மோகன்

பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், தற்காப்பு வாதங்களை முன்வைப்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது. தவறுகளை மறைக்க உருவாக்கப்படும் இத்தகைய போலி நியாயங்கள், மக்களின் உண்மையான வேதனைகளையும் கோரிக்கைகளையும் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றன. எங்களைச் சரிசெய்து கொள்ள ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டு, இன்னும் நிர்வாக பலமின்மை வெளிப்படுத்துகிறது.

புகாரளித்தவர்கள் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆளுங்கட்சியை எதிர்த்துக் குற்றம் சுமத்துபவர்கள் மீதே காவல்துறையை வைத்துக் கைது நடவடிக்கைகளும், மிரட்டல்களும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தச் சூழலில், தீபாவளியன்று தாக்கப்பட்ட ஒருவர், துணை சபாநாயகரின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டு, மிரட்டப்பட்டு ஒரு வீடியோ வெளியிட வைக்கப்பட்டதாகப் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், எம்.எல்.ஏ `எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். அப்படியென்றால், திடீரென்று பெண் ஆட்சியருக்குப் பாதுகாப்பாகப் புதிய பெண் காவல் அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியருக்குப் பாதுகாப்பு உயர்த்தப்பட்டது தொடர்பாக எழுப்பப்படும் நியாயமான கேள்விகளுக்கும் கூட, வழக்கம்போல அரசு தரப்பில் ஏதேனும் ஒரு திரைக்கதை வசனத்தை எழுதி நாடகமாடிச் சமாளித்தாலும் வியப்பதற்கில்லை.

அது ஒரு பெண் அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தவெக ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் தமிழ்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள், குற்றங்களே நடக்காது, நாடே இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்தார்கள்.

கனிமொழி
கனிமொழி

ஆனால் நடைமுறையில், ஒரு எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் இராணுவம் செய்யும் அட்டூழியங்களைப்போலவே தவெகவினர் இன்று தமிழ்நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இன்றைய சூழலில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத அவலநிலை உருவாகியுள்ளது. நாள்தோறும் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். இந்த ஆட்சி ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள வேளையில், இனிமேலாவது அரசு தங்களின் நிலைமையை உணர்ந்து, பொறுப்போடும் கவனத்தோடும் செயல்பட வேண்டும்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.