மனு அளிக்கச் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கினாரா துணை சபாநாயகர்? - வைரலான வீடியோவும், மறுப்பும்!

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னை காணவந்த நிருபர் மற்றும் கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அப்படி துணை சபாநாயகரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர் மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து, தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள கார்த்திக்குமார் முயன்றதாகவும், ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக்குமார், அங்குள்ள துணை சபாநாயகரின் வீட்டின் அருகே அவரை சந்தித்து தன் பகுதி பிரச்னைகள் குறித்து முறையிட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக்குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய துணை சபாநாயகர், அவரை சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயரைப் பலமுறை உச்சரித்தும், அத்தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக்குமார், தற்போது மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே ஒரு வீடியோவை வெளியிட்ட கார்த்திக்குமார், "எனது மரணத்திற்கு துணை சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே காரணம்" என்று பேசியிருந்தார்.

karthikumar

குறைகளை தெரிவிக்க வந்த சொந்த தொகுதி மக்களிடம், அரசு பொறுப்பில் உள்ள ஒரு துணை சபாநாயகர் இது போன்று அடாவடியில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனிடையே, துணை சபாநாயகர் ரவிசங்கருடன் இருந்தபடி கார்த்திக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

"நான் ரவி அண்ணாவின் வீட்டிற்குச் செல்வதற்காகத்தான் வந்திருந்தேன். நாங்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒரு குடும்பத்தைப் போல ஒன்றாகப் பயணித்து வருகிறோம். அப்போது, கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், நாங்கள் ஒரே கட்சியில் இருந்து அண்ணன் ரவிசங்கர் துறையூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக நின்றபோது, வெற்றி பெற வேலை செய்தோம். இப்போது, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறாக இந்தச் சம்பவம் பரப்பப்படுகிறது. நாங்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.