பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டுமா? கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!
பங்குச் சந்தை முதலீடு மக்களிடையே பிரபலமாகிவருகிறது. தங்கம், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடுகளாகப் பார்க்கப்பட்டுவந்த நிலையில் சமீப காலமாகவே பங்குகளில் முதலீடுகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதானதா என்றால் இல்லை. செபியின் அறிக்கைபடி பெரும்பான்மை சிறு முதலீட்டாளர்கள் சந்தையில் நஷ்டத்தையே சந்திக்கிறார்கள். ஏன், பங்குகளில் சிலர் லாபம் பார்க்கும்போது மற்றவர்களால் லாபம் அடைய முடியவில்லை.
அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சந்தை யாருக்கும் தனிப்பட்ட வகையில் இயங்குவதில்லை. சந்தையின் செயல்பாடுகள் எப்போதும் பொதுவானதுதான். அதில் ஒவ்வொரு தனிநபரும் என்ன முடிவெடுக்கிறோம், எந்தப் பங்குகளை வாங்குகிறோம், என்ன விலையில் வாங்குகிறோம், எப்போது விற்கிறோம் எதற்காக விற்கிறோம் என்பதில்தான் லாப நஷ்டமெல்லாம் அடங்கி இருக்கிறது.
பங்கு முதலீட்டில் லாபம் பார்கக் வேண்டுமெனில் நான்கு முக்கியமான விஷயங்களை ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்னென்ன?
1. ஒரே துறையில் முதலீட்டை முடக்க வேண்டாம்
எப்படி ஒரே சொத்தில் எல்லா பணத்தை முதலீடு செய்யக்கூடாதோ, அப்படித்தான் நம்முடைய மொத்த முதலீட்டையும் ஒரே துறை சார்ந்த பங்குகளில் போடக்கூடாது. வங்கித்துறை, எரிசக்தி, தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், ஐடி, மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்த பங்குகள் சந்தையில் உள்ளன. நாம் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகளையும், பங்குகளையும் கலவையாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீடு செய்தால், அதில் ஏற்படும் பாதிப்பினால் நம்முடைய முதலீடு மொத்தமும் நஷ்டமாகலாம். கலவையாக முதலீட்டை மேற்கொள்ளும்போது ஒரு துறை பாதிப்படைந்தாலும், மற்ற துறைகளின் செயல்பாடு நம் முதலீட்டை ஓரளவுக்குச் சமன் செய்ய வாய்ப்புள்ளது.
2. வளர்ச்சியை மட்டும் பார்க்காமல் மதிப்பீட்டையும் கவனியுங்கள்!
பொதுவாக முதலீட்டாளர்கள் பங்குகளைத் தேர்வு செய்யும்போது அதன் பிரபலம், பாரம்பர்யம், கடந்த கால வளர்ச்சி போன்ற விஷயங்களைப் பார்ப்பார்கள். அப்படி பார்ப்பது தவறில்லை. ஆனால், அவற்றை மட்டுமே பார்க்கக்கூடாது. பங்குகளை நாம் வாங்குவதற்கும் அதில் லாபம் பார்ப்பதற்கும் இவை மட்டும் போதாது. அந்தப் பங்கின் மதிப்பு முக்கியம். பங்கின் மதிப்பீடு அதிகமாக இருக்கும் வாங்கினால் அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும் நிறுவனமாக இருந்தாலும் நமக்கு லாபம் கிடைக்காமல் போகலாம்.
3. பங்கின் விலை நகர்வையும் கவனியுங்கள்!
நீங்கள் வாங்கிய பங்கு நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் பங்கு விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே தொடர்ந்து பங்குகளில் விலை நகர்வுகளைப் பார்க்க வேண்டும். நிறுவனங்களின் செயல்பாடுகளையும், நிதிநிலையையும் ஆராய்வதுடன், சரியான விலையில் முதலீடு செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விலை நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

4. ஸ்டாப் லாஸ் அவசியம்!
பங்கு முதலீட்டில் லாப இலக்குகளை நிர்ணயிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இழப்பைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம். அதற்காக ஸ்டாப் லாஸ் அளவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஸ்டாப் லாஸ் என்பது இழப்புக்கு உத்தரவாதமான பாதுகாப்பு அல்ல. திடீரெனப் பங்கு விலை சரியும் சூழலில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் குறைவான விலையில் பங்குகளை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம். வாராந்திர இறுதி விலையின் அடிப்படையில் ஸ்டாப் லாஸ் கணக்கிடும்போது, அதற்குள் இழப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரு விஷயத்தை முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது. நல்ல நிறுவனத்தை அடையாளம் காண்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நிறுவனத்தின் பங்கைச் சரியான விலையில் வாங்குவதுதான் முதலீட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


