பெரியார் நூலகம்: கடந்த திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன்
கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான் அகல்விளக்கு பதிப்பகத்தைக் கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.
நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பெரியார் நூலகத்தில் சம்பந்தம் இல்லாத புத்தகங்களைச் சரியான வழிமுறைகளைப் பின்பற்றாமல் விலைக்கொடுத்து வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிகாட்டினார்.
உடனே விசாரனை மேற்கொண்டதில் கடந்த ஆட்சியில் இந்த ஊழல் நடந்திப்பது தெரிய வந்திருக்கிறது. பல லட்சம் மதிப்பில் நூல்கள் வாங்குவதில் ஊழல் நடந்திருக்கிறது. பெரியார் பெயரில் இப்படி ஒரு ஊழல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நிறைய நூலகங்கள் கட்டியது நாங்கள் (திமுகவினர்)தான் என்று பெருமைப்படுகின்ற மாதிரி நிறைய ஊழல்கள் செய்ததும் நாங்கள்தான் என்று பெருமைப்படுகின்ற அளவுக்கு இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் மோசடி நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
யார் நூலகத்தைக் கட்டினார்கள் என்பது முக்கியம் இல்லை. யார் நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


