மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: சாத்தான், மாந்திரிகம், அம்மன் சக்தி - சுந்தர்.சி காம்போ வெல்கிறதா?

காவல் அதிகாரியாக இருக்கும் சக்திக்கு (நயன்தாரா) இரவு நேரங்களில் அமானுஷ்யமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் அவரை மயிலாஞ்சி என்னும் ஊருக்குச் செல்லச் சொல்கிறது ஓர் உருவம். பணியிட மாற்றம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கும் செல்கிறார் சக்தி. அங்கு 2000 வருடம் பழைமையான மூக்குத்தி அம்மன் கோயில் ஒன்றையும் அவர் கண்டுபிடிக்கிறார்.

மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் | Mookuthi Amman 2 Review

அதே நேரத்தில், 2000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறார் மந்திரவாதி (ரெஜினா காஸ்ஸாண்ட்ரா). இவராலும், இவருடைய முன் ஜென்மக் காதலனாலும் (துனியா விஜய்) சக்திக்கு அடுக்கடுக்கான சிக்கல்கள் வருகின்றன. இதனைச் சமாளிக்க அவர் எடுக்கும் அம்மன் அவதாரமே சுந்தர.சி-யின் மூக்குத்தி அம்மன் 2.

காவல் அதிகாரியாகத் தனது எல்லையிலேயே நின்று தேவையான பங்களிப்பை நல்கியிருக்கிறார் நயன்தாரா. அம்மனாகத் துடிப்போடும் ஆங்காரத்தோடும் சூலத்தை ஓங்கும் இடங்களில் கச்சிதமாக உருவம் மாறியிருக்கிறார்.

வில்லியாக ரெஜினா கஸாண்ட்ரா, ஓரிரு இடங்களில் மட்டுமே வில்லத்தனத்தைத் தட்டியெழுப்புகிறார். இவருடைய கதாபாத்திரமும் புரியாத புதிராக நகர்வதால் நம்மிடமிருந்து தூரமாகவே நிற்கிறது. மற்றொரு வில்லனாக துனியா விஜய் 80-ஸ் வில்லத்தன டோனை இப்போது கடன் வாங்கித் தந்திருக்கிறார்.

மூக்குத்தி அம்மன் 2  விமர்சனம் | Mookuthi Amman 2 Review
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் | Mookuthi Amman 2 Review

இவர்களைத் தாண்டி, துணை பாத்திரங்களில் ஊர்வசி மட்டுமே கவர்கிறார். யோகி பாபு, வெங்கட் ராகவன், மைனா நந்தினி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் காலாவதியான காமெடி ஊசியைக் குத்திவிட்டுப் போகிறார்கள்.

கேமியோ ரோலில் அம்மன்கள் வருகிறார்கள், அவ்வளவே! கதாபாத்திரங்கள் எவையும் வலுவாக எழுதப்படாததால், அனைத்துமே எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காமல் போயிருக்கிறது.

பிரமாண்ட உலகத்தை உருவாக்கிட பிளான் போட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கிரீன் மேட் ஸ்டுடியோவிலும், செட்களிலும் தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். ஆனால், அந்த விஷுவலுக்கு கிராபிக்ஸ் வடிவமைப்புக் குழு கைகொடுக்காதது ஏமாற்றமே! அந்தக் கிராபிக்ஸ் காட்சிகளும் வீடியோ கேம் தரத்தில் அமைந்திருப்பது திரையரங்க அனுபவத்தைச் சிதைக்கிறது. கதையின் மோதலைக் கட்டமைக்கும் முதல் 20 நிமிட ஃபேன்டஸி காட்சிகள் மட்டுமே ஆர்வத்தோடு உற்றுக் கவனிக்க வைக்கின்றன.

மூக்குத்தி அம்மன் 2  விமர்சனம் | Mookuthi Amman 2 Review
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் | Mookuthi Amman 2 Review

அதற்குப் பிறகு நம்மைச் சோர்வூட்டி, தாலாட்டும் படத்தின் மீது படத்தொகுப்பாளர் ஃபேனி ஆலிவர் கவனத்தைக் காட்டியிருக்கலாம். 2x ஸ்பீடில் படத்தை வேகமாக நகர்த்துவது மட்டுமே போதாதே! ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடல்கள் ஒரு புறம் படத்திற்குத் தடையாக இருந்தாலும், அதிலும் நம்மை ஈர்க்கும் புதுமைகள் இல்லாதது சோகம். அம்மனுக்கு அருள் ஏற்றாமல், நமக்கு இரைச்சலையே இலவசமாகத் தந்திருக்கிறது பின்னணி இசை.

தான் யார் என்றே தெரியாத அம்மன், மானிட அவதாரத்தில் சிக்கலில் மாட்ட, உள்ளே இருக்கும் சக்தி வெளியே வந்து ருத்ரதாண்டவம் ஆடும் வகையில் மாற்றி யோசித்திருக்கிறார்கள் கதாசிரியர்கள் சுந்தர் சி & வெங்கட் ராகவன்.

நாயகிக்கு வரும் அமானுஷ்ய கனவுகள், அவருக்குத் திடீரென கிடைக்கும் சூப்பர் பவர்கள் என்பதாக நடையைத் திறக்கும் படத்தின் முதல் 20 நிமிடங்கள் ஆர்வத்தோடு நம்மைக் கூட்டிப் போகின்றன. இதன் பிறகு தொடங்கும் எக்கச்சக்கமான லாஜிக் மீறல்கள், வழக்கொழிந்துபோன ஃபார்முலாக்கள் சோம்பலை மட்டுமே அள்ளித் தெளிக்கிறது. கதாபாத்திரங்களும், அதன் நகர்வுகளும் துளியும் நம்மோடு ஒட்டாததால், கடைசி வரை கதைக்கு வெளியே அந்நியமாகவே நிற்கின்றன.

மூக்குத்தி அம்மன் 2  விமர்சனம் | Mookuthi Amman 2 Review
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் | Mookuthi Amman 2 Review

இந்த ஊர் மந்திரவாதி ரெஜினாவுக்கு எதற்கு எகிப்து டிரஸ்?! அதற்கான ஒப்பனைகளிலும் படுசெயற்கைத்தனம் பாஸ்! இடையிடையே சுந்தர் சி-யின் டிரேட்மார்க் காமெடி சூழல்கள் இடம்பெற்றாலும், இக்கதைக்கு அவை உதவவில்லை. இரண்டாம் பாதியில் ராஜா காலத்துப் பிளாஷ்பேக்கிற்கு நகர்கிறது திரைக்கதை. அதிலும் கதாபாத்திரங்களோடும், கதையோட்டத்தோடும் எமோஷனல் தொடர்பு உண்டாகவே இல்லை.

அதோடு, மேக்கிங்காகவும் நமக்கு ஏமாற்றத்தையே பரிசளிக்கிறது படம். ஃபேன்டஸியாக இருந்தாலும் சிறு துளியாவது கதையில் லாஜிக் வேண்டாமா சார்?! கதையின் இறுதி அத்தியாயமும் நாம் கேட்டுப் பழகிய அம்புலி மாமா கதைகளையே வெவ்வேறு வடிவங்களில் சொல்கிறது. அதற்குப் பிறகு வரும் அம்மன் பாடல், கேமியோக்கள் என எதுவுமே நம்மை சர்ப்ரைஸ் செய்யவில்லை.

மேக்கிங், திரைக்கதை ஆகியவை இன்னும் நேர்த்தியான வடிவம் பெற்றிருந்தால் மூக்குத்தி அம்மன் 2வுக்கு வேண்டுதலோடு வந்து தரிசனம் செய்திருக்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.