பெரியார் நூலகம்: நூல் கொள்முதலில் ஊழல் - பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், ``நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப்பெயர்கள். நூல்களில் காணப்படும் ’பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) அனைத்தும் பொய்யானவை.

பெருமாள் முருகன்

அவற்றை இணையத்தில் தேடினால் அப்படிப்பட்ட எண் இல்லை என்றே தகவல் வருகிறது. பதிப்பக முகவரியும் போலி என்றே தோன்றுகிறது. அகல் விளக்கு பதிப்பக முகவரி இது: 3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091. மடிப்பாக்கத்தில் பாரத் நகரோ பிரம்மபுத்திரா தெருவோ இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டவில்லை. நூலில் akalvilakkupathipagam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அது இந்நூல் விநியோகத்துக்காக உருவாக்கப்பட்டது போலும். கைப்பேசி எண் எதுவும் இல்லை.

போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன? ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணைக் குழு அமைத்து நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோருக்குக்கான வங்கி இணைப்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``கோவை நகரில் அண்மையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்டமான நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இது திறக்கப்பட்ட உடனே, எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் "இந்த நூலகத்தை நாங்கள்தான் கட்டினோம், நாங்கள்தான் கட்டினோம்" என்று உரிமை கோரத் தொடங்கிவிட்டனர். அவர்கள் சொந்த வீட்டுப் பணத்திலா இதைக் கட்டினார்கள்? பொதுமக்கள் செலுத்திய வரிப் பணத்தில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மாணவர்களின் கரங்களால் இது திறந்து வைக்கப்பட்டது. இதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. எனினும், நான் பெரிதும் மதிக்கும் மூத்த எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் சிந்தை என்ற இணையதளத்தில் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.

அந்தப் பதிவைப் படித்துப் பார்த்தபோது, "பெரியார் நூலகக் புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். "இப்பதானே திறந்து வைத்தோம், அதற்குள் நமக்குத் தெரியாமல் அதிகாரிகளோ அல்லது வேறு யாரோ தவறு செய்துவிட்டார்களா? யாராக இருந்தாலும் விடக்கூடாது" என்ற எண்ணத்துடன் அது குறித்த விவரங்களை எடுத்து முழுமையாக ஆய்வு செய்தேன்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ் இலக்கிய வட்டத்தில் பல நூல்களை வாசித்தவன் என்ற முறையில், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர்களின் பெயர்களை என் வாழ்நாளில் நான் கேள்விப்பட்டதே இல்லை. குறிப்பாக, ஒரே ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்திடம் இருந்து மட்டுமே சுமார் 1,500 புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் இயங்குகிறதா என்ற ஆச்சரியமே ஏற்பட்டது.

அந்தப் புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன என்று ஆராய்ந்து பார்த்தபோது, அவை அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதத்தில், அதாவது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை. தந்தை பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட நூலகத்திலேயே ஊழல் செய்திருப்பது, கடந்த திமுக ஆட்சியின் மெகா ஊழலுக்கு மிகச் சிறந்த சான்றாகும்.

எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்த சூழலே காணப்படுகிறது. பெரியாரின் பெயரைச் சூட்டிய ஒரு நூலகத்திலேயே இப்படி ஒரு மெகா ஊழலைச் செய்திருக்கிறார்கள். இந்த ஊழல் விவகாரத்தில் எங்கள் தவெக தலைவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், `நாங்கள் தவறான வழியில் செல்லமாட்டோம்; தவறு செய்தவர்களையும் சும்மா விடமாட்டோம்! நூலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் குறித்து முறையான விசாரணை உடனடியாகத் தொடங்குகிறது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஏனெனில் இது சாதாரண ஆட்சியல்ல. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் நேர்மையான ஆட்சி!" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.