எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில், சங்கர்ராமன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம், சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் உயிரிழந்த கணவர்

இதில் சங்கர்ராமன் தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து பலியானார். இந்நிலையில் சங்கர்ராமன் விபத்தில் சிக்கிய தகவல் அவரது மனைவி ஜெயாவுக்கு சொல்லப்பட, விபத்து நடந்த இடத்துக்கு பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதையடுத்து சாலையில் கிடந்த கணவரைப் பார்த்துக் கதறினார். கணவர் இறந்துவிட்டார் என்பதை அவர் மனம் ஏற்கவில்லை. சங்கர்ராமன் முகத்தில் மொய்த்த ஈக்களை தனது சேலையால் விரட்டினார்.

அத்துடன், ``ஏங்க எழுந்திரிங்க... நாம வீட்டுக்குப் போயிடலாம், உங்களுக்கு ஒண்ணும் இல்ல, எழுந்திரிங்க" என்று தொடர்ந்து, கணவரை எழுப்பிக் கொண்டே இருந்தார். கால்களைப் பிடித்து தேய்த்துச் சூடேற்றினார். எப்படியாவது கணவர் மீண்டும் எழுந்து விட மாட்டாரா என்ற பரிதவிப்புடன் அவரது உடலுடன் போராடினார்.

திருவாரூர் கணவன் விபத்து

அரைமணி நேரத்துக்கும் மேலாக, கணவரை உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் ஜெயா நடத்திய பாசப் போராட்டத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் கலங்கினர். கணவரின் பிரிவை ஏற்க முடியாமல் கண்ணீருடன் தவித்த ஜெயாவை, அருகில் இருந்தவர்கள் தேற்ற முடியாமல் தவித்து நின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.