BB: `நிகழ்ச்சியின் போக்கு தெரிஞ்சதால பணப்பெட்டி எடுத்தேன்!- தன் பிக்பாஸ் அனுபவம் பகிரும் அமுதவாணன்
விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10, விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
முனியம்மாதான் இந்த சீசனில் டைட்டில் வாங்கப் போறாங்க என்கிறார்கள் சிலர். `வாசன் வர்றதுக்கு முன்னாடி வரை அவங்களுக்கு வாய்ப்பு இருந்திச்சு, ஆனா இப்ப நிலைமை அப்படியில்ல, வாசனுக்குத்தான் டைட்டில் என்கிறார்கள் வேறு சிலர்.
அந்தப் பக்கம் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் டைட்டிலை நோக்கியே தங்களது கேமை ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு கடைசி வரை அந்த வீட்டில் இருந்ததுடன் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பணப்பெட்டியை எடுத்து வேளியேறிய அமுதவாணனிடம் பேசினோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில ஆறாவது சீசன்ல கலந்துகிட்டேன். நிகழ்ச்சியில வைக்கப்பட்ட டாஸ்குகள்ல பெரும்பாலான டாஸ்குகள்ல ஜெயிச்சேன். ஆனா டைட்டில் அசீமுக்குக் கிடைச்சது.
ஆனாலும்கூட கடைசிக் கட்டத்துல பணப்பெட்டியை எடுத்துட்டு வெளியேறிய என் முடிவு சரியானதுதாங்கிறதுல இப்பவரை தெளிவாதான் இருக்கேன்.
நிகழ்ச்சியில இருந்து வெளியில வந்த புதுசுல நிறையப் பேர் எங்கிட்ட , நீங்க இருந்திருந்தா டைட்டில் வாங்கியிருக்கலாம்னு சொன்னாங்க. ஆனா அந்த வீட்டுக்குள் இருந்த எனக்கு கேமின் போக்கு தெரியுமில்லையா, அதைத் தெரிஞ்சு முடிவெடுக்கிறதுதானே புத்திசாலித்தனம்?
அதேநேரம், ஆடியன்ஸ் தரப்புல டாஸ்குகள்ல எல்லாம் ஜெயிக்கிறவங்களுக்குத் தானே டைட்டில் கிடைக்கணும்னு சொல்றதும் நியாயமாத்தான் படுது என்றவரிடம்,
இந்த பிக்பாஸ் சீசன் குறித்துக் கேட்டோம்.
பொதுவாகவே இந்த மாதிரி ஷோ வாய்ப்பு கிடைக்கிற எல்லாருமே அதை நல்லவிதமா பயன்படுத்தணுங்கிறதுதான் என்னோட கருத்து. டாஸ்குகளை ஒவ்வொருத்தரும் ஆர்வத்தோட செய்யறப்பதான் நிகழ்ச்சி விறுவிறுப்பா போய் ஆடியன்ஸ்க்கும் அது சுவாரஸ்யமா இருக்கும். ஆனா இப்பெல்லாம் மிக்சர் சாப்பிடுறாங்கனு சிலரைக் குறிப்பிடற கேலி, கிண்டல்களைப் பார்க்குறேன்.
மிக்சர் சாப்பிட ஆசைப்பட்டா ஸ்வீட் ஸ்டாலுக்குப் போனா போதுமே, எதுக்கு லட்சக்கணக்கானவங்க பார்க்குற ஒரு பிளாட்ஃபார்ம் போய் மத்த சிலரோட வாய்ப்பைத் தடுக்கணும்.
இந்த சீசன்ல யார் டைட்டில் வின் பண்ணுவான்னு பெட் கட்ட மாட்டேன். நல்லா விளையாடறவங்களுக்கு என்னோட வாழ்த்துகள், இன்னும் சரியா ஆடத் தொடங்காதவங்க, இன்னைக்காவது ஆட்டத்தைத் தொடங்குங்கன்னு கேட்டுக்கறேன் என முடிக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

