கேரளாவிலிருந்து Miss Universe போட்டிக்கு... இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஜியா லிஸ் மோஜோ!
தேசிய அளவில் கிரீடம் வென்று சாதித்துவிட்டார்... அடுத்து உலக அரங்கில் இந்தியாவுக்காக முத்திரை பதிக்கப் புறப்பட்டிருக்கிறார், 19 வயது காஜியா லிஸ் மேஜோ! கேரளாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காகப் போர்ட்டோ ரிக்கோவுக்குப் புறப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 போட்டியில் 52 போட்டியாளர்களை முந்தி பட்டத்தைக் கைப்பற்றினார் காஜியா. இதன் மூலம் தேசிய அளவில் கேரளாவுக்குப் புதிய பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
அழகிப் போட்டி உலகில் இவரது பயணம் படிப்படியாக வளர்ந்த ஒன்று. தனது 17 வயதில் மிஸ் டீன் திவா 2024 பட்டத்தை வென்றார். தொடர்ந்து 2025-ல் நடைபெற்ற மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று முதல் ரன்னர் அப் இடத்தைப் பிடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிஸ் யுனிவர்ஸ் கேரளா 2026 பட்டத்தையும் வென்று, மாநிலத்தின் இளம் வயது பட்ட வெற்றியாளராகச் சாதித்தார்.
தற்போது சட்டப்படிப்பு படித்துக்கொண்டே மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். 12 ஆண்டுகள் பாரம்பர்ய நடனப் பயிற்சி பெற்றுள்ள இவர், வயலின், டிரம்ஸ் வாசிப்பதிலும் திறமை கொண்டவர்.
இந்நிலையில் சுமார் 130 நாடுகள் பங்கேற்கும் மிஸ் யுனிவர்ஸ் 2026 போட்டியின் இறுதிச்சுற்று நவம்பர் 24-ம் தேதி போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் நடைபெறவுள்ளது. தேசிய அளவில் சாதனை படைத்த காஜியா, சர்வதேச மேடையிலும் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

