US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்
அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பப்பாஸ். அவரது வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரின் இணை வான் பென்ட்லியும் உடனிருந்தார்.
நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியின் முன்னாள் செனட்டர் ஜான் இ.சுனுனுவைத் தோற்கடித்திருக்கிறார், 46 வயதான பப்பாஸ். ஓய்வுபெறும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜீன் ஷஹீனின் இடத்தை அவர் நிரப்பவிருக்கிறார். பப்பாஸ் 56.2 சதவிகித வாக்குகளையும், சுனுனு 41.9 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.
அன்பும் உண்மையும் வென்றிருக்கிறது!
வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தனது இணை வான் பென்ட்லிக்கு நன்றி தெரிவித்த பப்பாஸ், "என் அருகில் நிற்கும் அற்புதமான கணவர் வானுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்றிரவு வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், நான் நேசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டிருப்பதால் நான்தான் அதிர்ஷ்டசாலி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். எதிர்மறையான விமர்சனங்களையும் பொய்களையும் கடந்து அன்பும் உண்மையும் வென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
109 ஆண்டுக்கால குடும்பத் தொழில் பின்னணி
கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பப்பாஸ், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவரது குடும்பம் 109 ஆண்டுகளாக நடத்திவரும் உணவகத் தொழிலிலும் அவர் பங்காற்றி வருகிறார்.
அரசியலில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணப் பிரதிநிதியாகவும், மாகாண நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2018-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொடர்ந்து நான்கு முறை அந்தப் பதவியை வகித்தார்.
மருத்துவச் செலவுகளைக் குறைப்பது, இன்சுலின் விலையைக் கட்டுப்படுத்துவது, கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது, அரசியல்வாதிகளின் பங்கு வர்த்தகத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

சமூகப் பிரதிநிதித்துவத்தில் புதிய அத்தியாயம்
இதற்கு முன்பு பெண்கள் உட்பட LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க செனட்டில் இடம்பெற்றிருந்தாலும், வெளிப்படையாகத் தன்னை தன்பாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆண், செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன் முறை.
2027 ஜனவரியில் பதவியேற்கவிருக்கும் பப்பாஸின் வெற்றி, அமெரிக்க அரசியலில் பாலின அடையாளம் மற்றும் சமூகப் பிரதிநிதித்துவம் சார்ந்த விவாதத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


