வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்
அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் விஜய். நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை அம்பாசமுத்திரத்திலுள்ள அரசுப் பள்ளியில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். இச்சூழலில், அ.தி.மு.க-விலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த இசக்கி சுப்பையாவுக்கே மீண்டும் அங்கு சீட் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், “மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு சீட் கொடுத்ததால்தான் கடினமான சூழல் ஏற்பட்டது. எனவே, வேட்பாளர்களை மாற்ற வேண்டும்” என த.வெ.க நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மறுபக்கம், கிராமங்கள்தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிவரும் இசக்கி சுப்பையா, தொகுதிக்குள் இருக்கும் கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற சபை நடத்திவரும் மோகன் சி.லாசரஸைச் சந்தித்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்.
அத்துடன், ‘வேட்பாளர் அறிவிப்பு படல’மும் அரங்கேறியிருக்கிறது. “தலைமை வேட்பாளரை அறிவிக்கும் முன்பு தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார் சுப்பையா” என்று கொதிக்கிறார்கள் த.வெ.க-வினர்!
தமிழக முதல்வர் விஜய், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பசும்பொன் வராதது முக்குலத்தோர் சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. “தாராபுரத்தில் முருங்கக்காய் பறித்தவர், இடைத்தேர்தல் தொகுதிகள்தோறும் பயணிப்பவர் பசும்பொனுக்கு வரமாட்டாரா?” என்று கொதிக்கின்றன அச்சமூக அமைப்புகள். ஆனால், முதல்வர் பசும்பொன் வராமல் தன்னை அனுப்பி வைத்ததால் ஏக குஷியில் இருக்கிறாராம் அமைச்சர் நிர்மல்குமார்.

‘தேவர் சமூக மக்கள் மத்தியில் த.வெ.க-வின் அடையாளமாகிவிட்டால், தென்மாவட்ட அரசியலைக் கையிலெடுத்துவிடலாம்’ என்று கணக்குப் போட்டு காய்நகர்த்துகிறாராம். அதேநேரத்தில், ‘முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்’ என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட செய்திக் குறிப்புக்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘எப்படித் தேவர் பெயரை முழுமையாகக் குறிப்பிடாமல் இருக்கலாம்?’ என்று முக்குலத்தோர் அமைப்பினர் அதற்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர்மீதும் ஆதவ்மீதும் வருத்ததில் இருக்கும் சமூக அமைப்புகள் நிர்மல்குமார் தரப்புடன் சாஃப்ட்டாக செல்வதை நோட் போட்டிருக்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்!
தி.மு.க மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகிக்க முடியாது. எனவே, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மா.செ பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
‘புதிய மாவட்டச் செயலாளர் யார்?’ என்ற கேள்வி தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வில் வட்டமடிக்கின்றன. ‘அனிதா கைக்காட்டும் ஆள் மா.செ ஆகப்போகிறாரா... கனிமொழி டீமிலிருந்து ஒருவர் மா.செ ஆகப்போகிறாரா?’ என பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தீடீரென சைலன்டானார். இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகியிருக்கும் அனிதா, மீண்டும் அதிரடி அரசியலுக்குத் திரும்பப்போகிறார் என்கிறார்கள் திருச்செந்தூர் நிர்வாகிகள். ‘நான் கைக்காட்டும் ஆளுக்கு மா.செ பதவி கொடுங்கள்’ என்று தலைவரிடமே நேரடியாகப் பேசவும், தனக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பைக் கேட்டுப்பெறவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
“எதிர்வரும் இடைத்தேர்தலில் நா.த.க தனித்துப் போட்டியிடும். எல்லா தொகுதியிலும் கன்டெஸ்ட் செய்வோம்... அம்பை தொகுதியில் மட்டும் கான்சன்ட்ரேட் செய்வோம்” என்றுதான் சொல்லிவந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்நிலையில், திடீரென கிளம்பியிருக்கும் பொது வேட்பாளர் விவகாரம், கட்சியினர் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘தி.மு.க நம்மை ஆதரிக்குமா... தி.மு.க-விடம் அண்ணன் பேசிவிட்டாரா... அல்லது, பேசாமல் அறிவிக்கிறாரா?’ என எதுவும் தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

இதற்கிடையில் “பசியில் இருக்கும் என்னிடம் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் எனச் சொல்வேனா?” என்று சீமான் பேச, அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்டவர்கள் அதற்குக் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். ‘சீமான் என்ன முடிவில் இருக்கிறார்?’ எனத் தெரியாததால், நா.த.க மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் மெளனமாக கடந்துசெல்கின்றனர் நா.த.க-வினர். “கட்சி என்ன முடிவெடுத்தாலும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டுங்கள்” என்ற குரல்கள் நா.த.க-வுக்குள் எழுந்திருக்கின்றன.
முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணியில் வருவாய்துறையில் பணியாற்றும் முருகனின் பெயரைக் கொண்ட அதிகாரி ஒருவர், ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரும் மணல் மூலம் கல்லா கட்டிவருகிறாராம். இந்த அதிகாரி, திருத்தணி வருவாய் துறையிலேயே தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதால் கனிம வளங்களைக் கடத்தும் கும்பலுடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு வசூல் வேட்டையை நடத்திவருகிறாராம்.
அதோடு, தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் உறவினர்கள், அரசுக் கல்லூரி மற்றும் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் அருகில் ஏக்கர் கணக்கில் அரசு இடத்தை வளைத்துப்போட்டிருக்கிறார்களாம். அதற்கும் முருகனின் பெயரைக்கொண்ட அதிகாரியின் ஆதரவுதான் காரணமாம். இந்த அதிகாரி குறித்து த.வெ.க., அ.தி.மு.க தரப்பில் புகாரளிக்கப்பட்டபோதிலும் மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருக்கிறதாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


