Doctor Vikatan: கால் ஆணி தெரியும்... கைகளிலும் ஆணி பாதிப்பு வரும், தெரியுமா?

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. எனக்கு கை விரல்களில் ஆணி  ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதங்களில் தான் ஆணி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், கைகளில், குறிப்பாக விரல்களில் ஆணி வருமா... இது மற்ற விரல்களுக்கும் பரவும் என்று சிலர் சொல்கிறார்கள்.

இது உண்மையா? விரல்களில் ஆணி வரக் காரணம் என்ன, அதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்... இது மீண்டும் வராமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆர். கன்னையன்

பொது மருத்துவர் ஆர். கன்னையன்

பாதங்களில் ஆணி வருவதுதான் மிகவும் பொதுவானது. என்றாலும், கைகளிலும் விரல்களிலும்கூட ஆணி வரக்கூடும்.  தொடர்ச்சியான உரசலும் அழுத்தமும் ஏற்படும்போது, சருமம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள அந்த இடத்தில் தடிமனாக மாறுகிறது.

எழுதுவது, கருவிகளைப் பயன்படுத்துவது, தோட்ட வேலை செய்வது, உபகரணங்களைக் கையாள்வது அல்லது பொருள்களை இறுக்கமாகப் பிடிப்பது போன்ற செயல்பாடுகளால் ஏற்படும் தொடர் உராய்வு அல்லது அழுத்தம் காரணமாக விரல்களில் ஆணி ஏற்படலாம். இவை சிறிய, கடினமான, தடிமனான சருமப் பகுதிகளாகக் காணப்படும்.  மேலும், சில நேரங்களில் லேசான வலி அல்லது அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம்.

ஆணி பாதிப்பு என்பது தொற்றுநோய் அல்ல. எனவே, இது ஒரு விரலிலிருந்து மற்றொரு விரலுக்குப் பரவாது. இருப்பினும், பல விரல்களில் இதே போன்ற உராய்வு அல்லது அழுத்தம் ஏற்பட்டால், ஒவ்வொரு விரலிலும் தனித்தனியாகப் புதிய ஆணிகள் உருவாகலாம். பல விரல்களில் இத்தகைய கட்டிகள் அல்லது தடிப்புகள் தோன்றினால், அவை வைரஸ் மருக்களா (Viral warts) அல்லது வேறு ஏதேனும் சருமப் பிரச்னையா என்பதை உறுதிப்படுத்த சரும மருத்துவரை அணுகவும்.

கடினமான சருமத்தை மெதுவாகத் தேய்த்து மென்மையாக்கவும். வேகமாக அல்லது கடினமாகத் தேய்ப்பதைத் தவிர்க்கவும்.

ஆணி பாதிக்கப்பட்ட விரலை 5 முதல் 10 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். கடினமான சருமத்தை மெதுவாகத் தேய்த்து மென்மையாக்கவும். வேகமாக அல்லது கடினமாகத் தேய்ப்பதைத் தவிர்க்கவும். தடிமனான சருமத்தை மென்மையாக்க யூரியா (Urea) அடங்கிய மாய்ஸ்ச்சரைசரை (Moisturiser) பயன்படுத்தவும்.

ஆணியை வெட்டுவதோ, கிள்ளுவதோ அல்லது சருமத்தைப் பிய்த்தெடுப்பதோ கூடாது. ஆணி பாதிப்பு தொடர்ந்தாலோ அல்லது அதிக வலி இருந்தாலோ  சரும மருத்துவரை அணுகவும்.

உராய்வு ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் குறைக்கவும். தொடர்ச்சியாக ஒரே வேலையைச் செய்யும்போது பாதுகாப்புக்கு கிளவுஸ் அணியவும். கைகளுக்குத் தவறாமல் மாய்ஸ்ச்சரைசர் தடவவும். பாதிக்கப்பட்ட விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆணி வளர்ச்சியில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ, நிறம் மாறினாலோ, வீக்கம் அடைந்தாலோ அல்லது நீண்ட நாள்களாக ஆறாமல் இருந்தாலோ, சரியான காரணத்தை உறுதிப்படுத்த தாமதிக்காமல் சரும மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ளவும்.

டாக்டர் ஆர்.கன்னையன்:

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் மூத்த பொது மருத்துவர். இத்துறையில் 22 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.