வானிலிருந்து விழும் 1.5 டன் விண்கலம்: இந்தியாவுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

சுமார் 1.5 டன் எடை கொண்ட நாசாவின் விண்வெளித் தொலைநோக்கி ஒன்று, தனது 22 ஆண்டுக்கால பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்புகிறது. கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையவிருக்கும் இந்த விண்கலத்தின் சில பாகங்கள் தரையை வந்தடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பயணப் பாதையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இது மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஞ்ஞானிகள் இதன் உண்மையான ஆபத்து குறித்து விளக்கியுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நீல் கெரல்ஸ் ஸ்விஃப்ட் அப்சர்வேட்டரி (Neil Gehrels Swift Observatory) என்ற இந்தத் தொலைநோக்கி, கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆரம்பத்தில் ஸ்விஃப்ட் காமா-ரே பர்ஸ்ட் எக்ஸ்ப்ளோரர் என்று அழைக்கப்பட்ட இதன் ஆயுட்காலம் இரண்டாண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக சுமார் 22 ஆண்டுகள் இது விண்வெளியில் வெற்றிகரமாகச் செயல்பட்டது.

தற்போது செயலிழந்துவிட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி நவம்பர் 4-ம் தேதி மதியம் 2 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் என்று நாசா கணித்துள்ளது. இருப்பினும், இது நுழைவதற்கான கால அவகாசம் 11 மணி நேரம் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நுழையும்போது அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனாலும், சில கடினமான பாகங்கள் பூமியை வந்தடைய வாய்ப்புள்ளது.

நாசா

இந்த விண்கலம் விழ வாய்ப்புள்ள பகுதியாக, 20.6 டிகிரி தெற்கு அட்சரேகை முதல் 20.6 டிகிரி வடக்கு அட்சரேகை வரையிலான ஒரு பரந்த பட்டையை நாசா வரையறுத்துள்ளது. இந்தப் பட்டையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய, தென் அமெரிக்காவின் சில பகுதிகள் வருகின்றன. இந்தியாவின் தென்பகுதியும் இந்தப் பட்டைக்குள் அடங்குகிறது. குறிப்பாக, மேற்கில் டாமன் முதல் கிழக்கில் ஒடிசாவின் கட்டாக் வரை ஒரு கற்பனைக் கோடு வரைந்தால், அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் இந்தப் பட்டைக்குள் வருகின்றன. இதன்மூலம், மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த அபாய மண்டலத்திற்குள் இருக்கின்றன. அதே சமயம், டெல்லி, கொல்கத்தா மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தப் பட்டைக்கு வெளியே உள்ளன.

இருப்பினும், ஒரு நகரம் இந்த அட்சரேகைப் பட்டைக்குள் இருப்பதால், அங்கு விண்கலத்தின் பாகங்கள் விழும் என்று அர்த்தமல்ல. விண்கலம் எந்த இடத்தில் வளிமண்டலத்தில் நுழைகிறதோ, அதைப் பொறுத்தே அதன் சிதறல்கள் எங்கு விழும் என்பது தீர்மானிக்கப்படும். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ்ஸுக்குப் பேட்டியளித்த இந்தத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி பிராட் சென்கோ, பரந்த நிலப்பரப்பு இதன் பயணப் பாதையில் வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வாளர்கள், இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று கூறுகின்றனர். "அந்த அட்சரேகைப் பட்டையின் பெரும்பகுதி பெருங்கடல்தான் என்பது வெளிப்படை" என்று டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஜொனாதன் மெக்டொவல் கூறியுள்ளார். 1,500 கிலோ எடையில், சுமார் 100 கிலோ பாகங்கள் மட்டுமே பூமியை வந்தடைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பிராட் டக்கர், "பூமியில் 70% கடல் என்பதால், விண்கல பாகங்கள் கடலில் விழுவதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியிலிருந்து வரும் இது போன்ற பொருள்களைக் கண்காணிக்க இந்தியாவிடமும் பிரத்யேக உள்கட்டமைப்பு உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் மல்டி-ஆப்ஜெக்ட் டிராக்கிங் ரேடார் (MOTR), பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இந்த ஸ்விஃப்ட் தொலைநோக்கியை இஸ்ரோ கண்காணித்து வருகிறதா என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Neil Gehrels Swift Observatory

தனது 22 ஆண்டுக்கால பயணத்தில், இந்த ஸ்விஃப்ட் தொலைநோக்கி 2,000-க்கும் மேற்பட்ட காமா-கதிர் வெடிப்புகளையும், 1,400 சூப்பர்நோவாக்களையும் கண்டறிந்து விண்வெளி அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. செயலிழந்து விழும் இந்தத் தொலைநோக்கியைக் காப்பாற்ற நாசா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.