`நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!’ - 25,213 பேருக்கு அபராதம் விதித்த புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்
புதுச்சேரியில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை முறையாக அமல்படுத்த முடியாததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த மாநிலத்தின் அரசியல் சூழல். லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இல்லை என்று போலீஸார் அபராதம் விதிக்க முயற்சித்தால், அவர்களை அனுப்பிவிடுமாறு அமைச்சர்களே செல்போனில் பேசுவார்கள்.
அதனால் சாலை விதிகளை மீறும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. `ஸ்பாட் ஃபைன்’ முறையையும் செயல்படுத்த முடியவில்லை. அதேசமயம் வாகன விபத்துகளைக் குறைக்குமாறும், ஹெல்மெட் கட்டாயம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் புதுச்சேரி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக ஒருவழிப் பாதையில் செல்பவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள், சிக்னல்களில் நிற்காமல் செல்பவர்கள் உள்ளிட்டவர்களின் வாகன எண்களை கண்காணித்து அபராதம் விதித்து அதிரடி காட்டி வருகிறார் போக்குவரத்துக் காவல்துறை சீனியர் எஸ்.பி திவ்யா.
போக்குவரத்துக் காவல்துறையில் நிலவும் காவலர் பற்றாக்குறையால், நகரின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிப்பதிலும் சிரமம் நீடித்து வருகிறது. அப்படி இருந்தபோதும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன், அபராத நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது போக்குவரத்துக் காவல்துறை.
கடந்த அக்டோபர் மாதத்தில் விதிக்கப்பட்ட அபராதம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் போக்குவரத்து சீனியர் எஸ்.பி திவ்யா. அதில், `புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகள், விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்துப் போலீஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய 3,225 பேருக்கும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய 251 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஒருவழிப்பாதையில் வாகனத்தை ஓட்டிய 7,133 பேருக்கும், சிக்னல்களை மீறிய 1,476 பேருக்கும், மது போதையில் வாகனம் ஓட்டிய 317 பேருக்கும், வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 203 பேருக்கும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 5,081 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் கார்களை ஓட்டிய 744 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஏர்ஹாரன் ஒலித்தது மற்றும் பிற விதிமீறல்களில் ஈடுபட்ட 6,733 பேர் என மொத்த 25,213 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 11 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


