பாலிவுட் நடிகர் துஷார் கபூரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்திய கும்பல்

பாலிவுட் பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சகோதரரும், நடிகருமான துஷார் கபூரை மர்ம நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அந்த நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹார்ரி பாக்ஸர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ரூ.5 கோடி கொடுக்கவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தான். இது குறித்து உடனே துஷார் கபூர் போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் இது குறித்து விசாரித்து வந்தனர். மும்பை போலீஸாரிடம் ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹார்ரி பாக்ஸரின் குரல் மாதிரி இருக்கிறது.

எனவே தற்போது பணம் கேட்டு வந்த மிரட்டல் அழைப்பு குரல் மாதிரியை ஏற்கனவே தங்களிடம் இருக்கும் குரல் மாதிரியுடன் ஒப்பிட்டுப்பார்த்தனர். ஆனால் போலீஸாரிடம் இருக்கும் குரலோடு துஷார் கபூருக்கு மிரட்டல் விடுத்த நபரின் குரல் மாதிரி ஒத்துப்போகவில்லை.

இது தவிர போலீஸாரிடம் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரின் எந்தக் குரல் மாதிரியோடும் ஒத்துப்போகவில்லை.

இதனால் துஷார் கபூருக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில்தான் நடிகர் டைகர் ஷெராப் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடுடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தின் பெயரை யாரோ தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் முக்கிய பாலிவுட் பிரபலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.