``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? - டிடிவி தினகரன் காட்டம்

சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்... அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் கேட்டார். சிரித்து கொண்டே லயோலா மணி இடம் `500 கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும், பொருத்தம் இல்லாத ஒரு நபருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார். நான் தளபதியின் தம்பி என்றேன். பொருத்தம் உள்ள குப்புசாமி அண்ணணுக்கு ஒரு ரூபாய் வாங்காமல் அந்த பதவியை தர சொல்லி இருக்கிறார் என்று சொல்லி அனுப்பினேன்." என்றார்.

ராஜ் மோகன்

இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா? – அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா? - இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி அவர்களின் மூலம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே Tough கொடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் திரு. லயோலா மணி அவர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி பலரின் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேசப்பட்ட பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன எனப் பொதுமக்கள் மத்தியில் அடுத்தடுத்து எழும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களுக்கு உள்ளது.

லயோலா மணி
லயோலா மணி

ஒரு கோப்பைத் திறந்ததற்கே திமுக முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கிறார்; அடுத்தடுத்த கோப்புகளைத் திறந்தால் என்னவெல்லாம் ஆகுமோ? எனப் பில்டப்பிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படி இருந்திருந்தால், லஞ்சம் வாங்கியதாகச் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சருடன், லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த இந்நாள் நிதியமைச்சரும் சிறையில்தானே இருந்திருக்க வேண்டும்?

ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை; இடைத்தரகர் வேலை பார்த்தாலும் அவர் சொந்தக் கட்சியினராக இருந்தால் சலுகை என்ற தவெக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகளைத்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எனவே, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டு, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, இடைத்தரகர் வேலை பார்த்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் மீதும், இப்பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ராஜ் மோகன் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.