Doctor Vikatan: தொப்பையைக் கரைக்குமா மேஜிக் உணவுகள்... Fat burning foods என்பவை நிஜமா?
Doctor Vikatan: கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் என ஏதேனும் உள்ளனவா... குறிப்பாக, தொப்பையைக் கரைக்கும் Fat burning foods என சொல்லப்படுபவை உண்மையிலேயே பலன் தருமா... அவை பற்றி விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா
தொப்பை பகுதியின் கொழுப்பை நேரடியாக கரைப்பதற்கோ அல்லது ஒரே இரவில் வயிற்றைத் தட்டையாக்குவதற்கோ குறிப்பிட்ட உணவு எதுவும் இல்லை. எலுமிச்சை நீர், கிரீன் டீ, இஞ்சி அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக்கொள்வதெல்லாம் தொப்பை பகுதியின் கொழுப்பைக் கரைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இவையெல்லாம் முழுமையாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
தொப்பைக் கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவுப்பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கைமுறை மாற்றங்களின் ஒருங்கிணைப்பே பிரதானம். இருப்பினும், சில உணவுகள், வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துவதன் மூலமும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதன் மூலமும் சரியான எடையைத் தக்க வைக்க உதவக்கூடும்.
முட்டை, மீன், கொழுப்பு குறைவான கோழி இறைச்சி (lean chicken), பருப்பு வகைகள், பனீர் மற்றும் தயிர் போன்ற புரதம் (protein) நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். புரதச்சத்தானது தசைநார்களைப் பராமரிக்கவும், பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. காய்கறிகள், பழங்கள், ஓட்ஸ், சிறுதானியங்கள் மற்றும் முழுத்தானியங்கள் போன்ற நார்ச்சத்து (fibre) நிறைந்த உணவுகளும் செரிமானத்தை மேம்படுத்தி வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
ஆரோக்கியமான கொழுப்பு உள்ள நட்ஸ் மற்றும் சீட்ஸை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், சர்க்கரை சேர்த்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் மற்றும் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பதும் சரியான எடையைத் தக்கவைக்க உதவும்.

வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை இலக்காகக் கொள்ளுங்கள். வேகமான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தசைகளை வலுவாக்கும் (strength training) பயிற்சிகள் ஆகியவை உடலின் ஒட்டுமொத்த கொழுப்பைக் குறைக்க உதவும். வயிற்றுக்கான பயிற்சிகள் அடிவயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும். ஆனால், அவை வயிற்றுக் கொழுப்பை மட்டும் பிரத்யேகமாகக் கரைக்காது.
டயட் என்ற பெயரில் தவறான உணவுகளைச் சாப்பிடுவது, கொழுப்பைக் கரைப்பதாகச் சொல்லும் வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவது போன்றவற்றை நிச்சயம் செய்யக்கூடாது. வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றிய பிறகும் தொப்பைக் கொழுப்பு அதிகரித்தால், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது வளர்சிதை மாற்ற பிரச்னைகள் உள்ளனவா என்று தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகவும்.
ஊட்டச்சத்து ஆலோசகர் ரம்யா:சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


