Dorothy: 15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்! - நெகிழும் சனந்த்
திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக்கிறார்கள். டோரதி படத்திற்கு கிடைத்திருக்கும் அளப்பரிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் சனந்த்.
அந்தப் பதிவில் சனந்த், "15 வருடங்கள். ஆயிரம் கனவுகள். எண்ணற்ற போராட்டங்கள். தொடக்கமாக, இந்தத் தருணம். என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
சமீபத்தில் ஒரு பதிவில் படித்த ஒரு வரி, "பல தசாப்தங்கள் எதுவுமே நடக்காமல் கடந்து போகலாம். ஆனால், சில வாரங்களில் பல தசாப்தங்களுக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும்" என்பது. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பும், பாராட்டுகளும் இந்த வரிகளுக்கு அப்படியே பொருந்துகின்றன.
நீங்கள் தந்த ஆசீர்வாதங்கள், இதயப்பூர்வமான அரவணைப்புகள், கண்களில் கசியும் கண்ணீர் மற்றும் என்னுடைய நடிப்பைப் பற்றிப் பேசும்போது என் பயணத்தின் ஒரு பகுதி உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதைப் போல நீங்கள் வெளிப்படுத்தும் அந்த உற்சாகம்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது.
TIFF வரை பயணித்து, உங்கள் இதயங்களுக்குள் இடம்பிடித்து, என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு உணர்வை இந்தத் திரைப்படம் எனக்குப் பரிசளித்திருக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற அந்த உணர்வும், நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு குறுஞ்செய்தியும், கைப்பட எழுதிய கடிதமும், கட்டுரையும், எடிட்டும், தொலைபேசி அழைப்பும் என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.
இது தானாக நிகழ்ந்தது, இது உண்மையானது, இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
டோரதி பார்த்தவர்கள், அதைப் பற்றிப் பேசியவர்கள், தங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தவர்கள், அந்தத் திரைப்படத்தைக் கொண்டாடியவர்கள், அதற்காகக் குரல் கொடுத்தவர்கள், அதனுடன் சேர்ந்து அழுதவர்கள், சிரித்தவர்கள் அல்லது என் நடிப்பு தங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுத்தது என்று ஒரு நிமிடம் ஒதுக்கி என்னிடம் பகிர்ந்துகொண்டவர்கள் என அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!

நீங்கள் அனைவரும் என் கதையின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள். அதேபோல், டோரதியும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் என் தேவதைகள். உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, இறுக்கமாக அணைத்து, உங்கள் அன்பு எனக்கு எவ்வளவு பெரிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதுவரை, இந்த வார்த்தைகளின் வழியாக என்னால் அனுப்ப முடிந்த மிகப்பெரிய அன்பான அரவணைப்பை உங்களுக்குத் தருகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்! இன்னும் இன்னும் பல சுவாரஸ்யமான, சிறப்பான சினிமா நோக்கி... Lets go! எல்லாருக்கும் வரலாறு சிறப்புமிக்க ஒரு முத்தம்! டோரதி என்பது அன்பு, டோரதி என்பது நம்பிக்கை, டோரதி என்பது நாம் அனைவருமே." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


