குடியாத்தம்: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - டெலிவரி ஊழியரால் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கள்ளூர் பகுதி நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரஃபீக் அகமது, தரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரஃபீக் அகமது `ஃபிளிப்கார்ட்’ மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பொருள் டெலிவரி செய்யும்போது, டெலிவரி ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் தாள்களை ரஃபீக் அகமது கொடுத்துள்ளார்.

அந்த ரூபாய் தாள்கள் `கள்ள நோட்டு’ எனத் தெரியவந்ததால் டெலிவரி ஊழியர், இது குறித்து குடியாத்தம் நகர போலீஸில் புகாரளித்துள்ளார்.

போலீஸார் ரஃபீக் அகமதுவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, குடியாத்தம் தங்கம் நகரில் வசிக்கும் 52 வயதான ஜூபேர் அகமது என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கியதாகக் கூறியுள்ளார். அதன்பேரில், ஜூபேர் அகமதுவைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து இருபதாயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பல்

இந்த கள்ள நோட்டுகளை, ஆம்பூர் அடுத்துள்ள உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான கோபால் மற்றும் பேரணாம்பட்டு அடுத்துள்ள டி.டி.மோட்டூரைச் சேர்ந்த 48 வயதான காமராஜ் ஆகியோரிடமிருந்து வாங்கியதாக ஜூபேர் அகமது விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்களையும் கைது செய்த போலீஸார், அவர்களிமிடருந்தும் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கோபால் மற்றும் காமராஜிடம் விசாரணை நடத்தியபோது, ஆம்பூர் எஸ்.கே.ரோடு அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் 65 வயதான பாபு என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியதால், அவரையும் கைது செய்து அவரிடமிருந்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள நோட்டு வழக்கில் அவர் கைதாகி சிறைக்குச் சென்றதும், அப்போது கள்ள நோட்டு கும்பலிடம் ஏற்பட்ட தொடர்பில் அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் என உள்ளூர் பகுதிகளில் புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் இருந்து பாபுவுக்கு கள்ள நோட்டுகளை யார் விநியோகம் செய்வது? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தமாக 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் தாள்கள் அடங்கிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.