`இந்தியாவை வென்றுவிட்டீர்கள் - ஹாங்காங் சிக்ஸர்ஸ் வெற்றிக்கு வாழ்த்து; ட்ரோலில் சிக்கிய பிரதமர்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். அது உலகக் கோப்பையோ, ஆசியக் கோப்பையோ இல்லை, ஒரு சாதாரண போட்டியாக இருந்தாலும் இரு நாட்டு ரசிகர்களின் கவனமும் அதன் மீதுதான் இருக்கும்.
அந்த வகையில், ஹாங்காங்கில் நடைபெற்ற சிக்ஸர்ஸ் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இது ஒரு சிறிய தொடராக இருந்தாலும், இந்த வெற்றியைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடியதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி, ட்ரோல் ஆகி வருகிறது.
ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஆறு பேர் கொண்ட அணிகள் மோதும் ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2026 தொடர் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நடந்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தால் (11 பந்துகளில் 40 ரன்கள்) 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, கவாஜா நஃபேயின் (12 பந்துகளில் 41 ரன்கள்) மற்றும் கேப்டன் அப்பாஸ் அப்ரிடியின் (8 பந்துகளில் 35 ரன்கள்) அதிரடியால் 3.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரதமரின் ட்வீட்டும், கிண்டல்களும்!
இந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "ஹாங்காங் சிக்ஸர்ஸ் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்ற நமது வீரர்களுக்கு வாழ்த்துகள்! இது ஒரு நல்ல கிரிக்கெட் போட்டி. வீரர்களைத் தயார்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்விக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுகள்," என்று பதிவிட்டிருந்தார்.
ஒரு நாட்டின் பிரதமர், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் கிடைக்கும் வெற்றியைப் பாராட்டுவது இயல்பு. ஆனால், ஹாங்காங் சிக்ஸர்ஸ் போன்ற ஒரு சிறிய, சர்வதேச அளவில் பெரிய அங்கீகாரம் இல்லாத தொடரில் கிடைத்த வெற்றிக்காகப் பிரதமர் பதிவிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சமீப காலமாக ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது.
ஒரு பயனர், "ஹாங்காங் சிக்ஸர்ஸ் போட்டிக்கு எல்லாம் பிரதமர் பதிவிடுகிறார்" என்று கிண்டலடித்தார். மற்றொருவர், "மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள்... இப்போது ஏதோ ஒரு சாதாரண வெற்றியை கொண்டாடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார். சிலரோ, "உங்களுக்கு வேறு வேலை இல்லையா? ஸ்டிரீட் கிரிக்கெட் போன்ற ஒரு தொடருக்காக ட்வீட் செய்கிறீர்கள்," என்று விமர்சித்தனர்.
இன்னொருவர், "கோமாளித்தனமாக பேசாதீர்கள்! இது தொடக்க ஆட்டம் இல்லை. இதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோற்றது," என்று பிரதமரின் பதிவில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டினார். ஒரு இந்திய ரசிகர் கிண்டலாக, "கிரகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வென்றதற்கு வாழ்த்துகள். இது உலகக் கோப்பை அல்லது ஆசியக் கோப்பையை விடப் பெரியது," என்று பதிவிட்டது இணையத்தில் வைரலானது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்ஸை ராகுல் திரிபாதியும், நிதிஷ் ராணாவும் தொடங்கினர். திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஷாங்க் சிங், தனது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 11 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். மறுமுனையில் நிதிஷ் ராணா (14 பந்துகளில் 19 ரன்கள்) மெதுவாக ஆடியதால், அவர் ரிட்டயர்டு அவுட் செய்யப்பட்டார். ஆனால், அடுத்து வந்த ராகுல் தெவாட்டியா மற்றும் கேப்டன் க்ருனால் பாண்டியா ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால், இந்திய அணி 6 ஓவர் முடிவில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.
89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் அப்பாஸ் அப்ரிடி, க்ருனால் பாண்டியா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் சேர்த்தார். டி. நடராஜன் வீசிய அடுத்த ஓவரிலும் 28 ரன்கள் குவிக்கப்பட்டதால் பாகிஸ்தானின் வெற்றி உறுதியானது. அப்பாஸ் அப்ரிடி 8 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், கவாஜா நஃபேயின் அதிரடி தொடர்ந்தது. அவர் 12 பந்துகளில் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் 3.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்தியாவை வீழ்த்த முடியாத விரக்தியில், ஒரு சிறிய தொடரின் வெற்றியைப் பாகிஸ்தான் பிரதமர் கொண்டாடியது, இரு நாட்டு ரசிகர்களிடையேயும் சுவாரஸ்யமான விவாதங்களையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


