தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது - சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சஞ்சய் கெய்க்வாட், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில்,"தங்கள் உடலை விலங்குகள் உண்ணக்கூடும் என்பதை மக்கள் உணர்ந்து, அவர்களின் எச்சங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே அவர்கள் தற்கொலை செய்வதை நிறுத்துவார்கள்" என்று எம்.எல்.ஏ கூறினார்.
சஞ்சய் கெய்க்வாட்டின் இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் இதனால் அதிருப்தி அடைந்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கெய்க்வாட்டின் கருத்துக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
விவசாயிகளை ஆதரிப்பதற்காக சிவசேனா தீவிரமாக செயல்பட்டு வரும் நேரத்தில், இதுபோன்ற கருத்துக்கள் கட்சியின் இமேஜை கடுமையாக பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சஞ்சய் கெய்க்வாட்டை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
தொடரும் சர்ச்சைகள்
இதற்கு முன்பு கடந்த 2024ம் ஆண்டு புலி பல் பதக்கத்தை அணிந்து 1987ம் ஆண்டு புலியை வேட்டையாடியதாகக் கூறினார். அவரது கருத்து வனத்துறையின் விசாரணைக்கு வழிவகுத்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, ஊர்வலத்தின் போது ஒரு இளைஞனை போலீஸ் தடியடியால் தாக்கும் வீடியோ வெளியானதை அடுத்து, அவர் மீண்டும் மற்றொரு சர்ச்சைக்கு உள்ளானார். 2024ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறி சட்டச்சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
கடந்த ஆண்டு அவர் மகாராஷ்டிரா போலீஸ் துறையை உலகின் மிகவும் திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்தது என்று தெரிவித்தார். அதோடு அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, ஜூலை மாதம், உணவின் தரம் தொடர்பாக மும்பை எம்எல்ஏ விடுதியில் கேன்டீன் ஊழியரை உடல் ரீதியாகத் தாக்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


