விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழந்தையான சஞ்சய், அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ், சுய உதவிக் குழுவில் கட்டுவதற்காக மனைவி வைத்திருந்த பணத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் நேற்று மது குடித்திருக்கிறார்.
அதையடுத்து வீட்டிற்கு வந்த அவரிடம், `குழுவுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் எங்கே? என்று கேட்டிருக்கிறார் தேவி. அதற்கு, `அதெல்லாம் பொறுமையாக் கட்டிக்கலாம். அந்தப் பணத்துலதான் நான் சாப்பிட்டு வந்திருக்கேன் என்று கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று காலை, `குழுவுக்கு இன்னைக்குப் பணம் கட்டனும். நான் எப்படிக் கட்டுறது? என்று செல்வராஜிடம் கேட்டிருக்கிறார் தேவி.
அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து யாரிடமாவது பணம் கடன் வாங்குவதற்காகச் சென்ற தேவி, திரும்பி வந்து காலை உணவுக்காக மகன் சஞ்சயைத் தேடியிருக்கிறார். சஞ்சய் வீட்டில் இல்லாததைக் கண்ட அவர், அக்கம்பக்கத்தில் தேடியிருக்கிறார். எங்கும் சஞ்சய் இல்லாததால் கணவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது, `அவனை அந்தக் கெனத்துல தூக்கிப் போட்டுட்டேன் என்று கூலாகக் கூறிவிட்டு, மதுபோதையில் படுத்திருக்கிறார். பதறிப்போன தேவி, அழுதுகொண்டே கிணற்றை நோக்கி ஓடியிருக்கிறார்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அந்தக் கிணற்றில் குதித்து சிறுவனைத் தேடினார்கள். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் மூன்று மணி நேரம் தேடி கிணற்றில் இருந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர். மது போதையில் தந்தையே மகனைக் கொலை செய்த சம்பவம், அந்த கிராமத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


