ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே சார்ந்துள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையில் தொடங்கி நோயாளிகளின் படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது வரை பல்வேறு சேவைக் குறைபாடுகள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பில் பழுது எனக் கூறி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் ஒளியைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தும் உணவுகளை வழங்கியும் வரும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னணி குறித்து தெரிவித்த கோத்தகிரி அரசு மருத்துவமனை பணியாளர்கள், "நேற்று காலையில் இருந்தே மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐ.சி.யூ பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நேற்று இரவு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேறு வழியின்றி சில நோயாளிகளை எமர்ஜென்சி பிரிவுக்கு மாற்றி கண்காணித்து வருகிறோம்" என்றனர்.
கோத்தகிரி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் சப்ளை சரியாக இருக்கிறது. மருத்துவமனையின் ஒன்றிரண்டு பிளாக்குகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


