மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
கடந்த 23ம் தேதி மகாராஷ்டிர, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டமேலவை இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.
இதனால் வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நேற்று இரவுதான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச முடிவுகள் வெளியானது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் பா.ஜ.க 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போது நடந்துள்ள தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த முறையை விட இம்முறை சமாஜ்வாதி கட்சி கூடுதலாக இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
சட்டமேலவை இருக்கும் சட்டமன்றத்தில் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகக் கணக்கிடுவார்கள். பட்டதாரிகள் தொகுதி என்பது படித்து பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவது ஆகும்.
இதேபோன்று ஆசிரியர் தொகுதியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
வாரணாசி பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆறு ஆசிரியர் தொகுதியில் 4 தொகுதியை பா.ஜ.கவும், 2 தொகுதியை சமாஜ்வாடியும் பிடித்துள்ளது.
பா.ஜ.கவின் தினேஷ் குமார் மீரட் பட்டதாரி தொகுதியையும், மன்வேந்திர பிரதாப் சிங் ஆக்ரா பட்டதாரி தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. ஆசிரியர் தொகுதிகளில் லக்னோ, மீரட், பரேலி-மொராதாபாத், கோரக்பூர்-பைசாபாத் ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.
இத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 28 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களைக் கைப்பற்றியது.
குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள நான்கு இடங்களிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று, காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரில், எட்டு இடங்களில் நான்கு இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. அதேவேளையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தில் வெற்றி பெற்று மாநில மேலவையில் தனது முதல் இடத்தைப் பதிவு செய்தது.
மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு இத்தேர்தல் பெரிய பின்னடைவாக அமைந்தது.
5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இடங்களில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி வெற்றி பெற்றது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி புனே பட்டதாரிகள் தொகுதியில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் ஹர்ஷதா தேஷ்முக் கடும் போட்டிக்கிடையே வெற்றி பெற்றார். இதே போன்று அவுரங்காபாத் பட்டதாரிகள் தொகுதியில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதாப் சிங் வெற்றி பெற்றார்.
இது தவிர பா.ஜ.க கோட்டையாகப் பார்க்கப்படும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொந்த ஊரான நாக்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வஞ்ஜாரி வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். நாடு முழுவதும் நடந்த சட்டமேலவை தேர்தலில் நாக்பூரில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டது.
அமராவதி ஆசிரியர் தொகுதியில் சிவசேனா(ஷிண்டே)வும், புனே ஆசிரியர் தொகுதியில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் மறைந்த அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனக்கு செல்வாக்குள்ள பகுதியில் இரண்டு இடங்களைப் பிடித்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. இது அஜித்பவார் மனைவியும், துணைமுதல்வருமான சுனேத்ரா பவாருக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


