`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்... 3 கோடி ரூபாய் கமிஷன்? - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் லஞ்சம் கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை. ஆதாரமின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் உண்மைகளாகக் காட்ட முடியாது. நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. எந்தவிதமான நிதி முறைகேடு செயலிலும் ஈடுபடவில்லை. நான் பதவியேற்ற நாள் முதல் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, சந்தேகிக்கப்பட்டு வருகிறேன்.
பொது வாழ்வில் உன்னிப்பான கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு என்பது ஒரு சாதாரண விமர்சனம் அல்ல. அது எனது நேர்மையையும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. சமீபத்திய வாரங்களில், எனக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் ரூ.10 கோடி மதிப்பிலான வீடு என்று கூறி வருகின்றனர். தனது திருப்பதி பயணத்தின்போது அணிந்திருந்த ஒரு பேஷன் நெக்லஸ், தங்க நாணயச் சங்கிலியாக சித்தரிக்கப்பட்டது.
மதிப்பு மாறிக்கொண்டே இருக்கின்றன, கதைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சான்றுகள் ஏதும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தீய நோக்கத்தால் புனையப்பட்டவை. நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். தவறு நடந்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டால், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அவற்றை உண்மைகள், ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தான் பொது வாழ்வில் நுழைந்தேன். வேண்டுமென்று சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகளுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. எங்கள் பணியை நீங்கள் விரும்பும் அளவுக்குக் கடுமையாக விமர்சியுங்கள். இருப்பினும், வேண்டுமென்றே கூறப்படும் பொய்களும், புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் பொறுத்துக்கொள்ளப்படாது. தகுந்த சட்ட வழிமுறைகள் அனைத்தின் மூலமும் தனது நேர்மையைப் பாதுகாப்பேன்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


