கொச்சி கார் விபத்து: நீதிபதியை கைதுசெய்ய நடவடிக்கை; மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
கேரள மாநிலம் கொச்சி
சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் சேரானல்லூர் கன்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த நீதிபதியின் மகனின் பென்ஸ் கார் அவர் மீது மோதியது. இதில் ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியது நீதிபதியின் மகன் என்பதால், ஆரம்பம் முதலே இந்த வழக்கை மூடிமறைக்கவும், குற்றவாளியைத் தப்பவைக்கவும் சேரானல்லூர் போலீஸார் முயற்சிகளை மேற்கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் போலீஸார் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. ஜெயபாலகிருஷ்ணனின் மனைவி பிந்து, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சேரானல்லூர் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். தந்தையை இழந்து தவித்த பிள்ளைகள் வீதியில் இறங்கி நடத்திய போராட்டம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரள சட்டப்பேரவையிலும் எதிர்கட்சியான சி.பி.எம் குரல் கொடுத்தது. தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அறிவித்தார்.
போலீஸ் ஏ.டி.ஜி.பி விஜயன், ஏ.ஐ.ஜி அனூஜ் பாலிவால் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் நேற்று சேரானல்லூர் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, விபத்து நிகழ்ந்த கன்டெய்னர் சாலைப் பகுதியையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில், வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் கே.எஸ். ஷியாம்குமார், நிலையப் பொறுப்பு அதிகாரியான எஸ்.ஐ வி.எஸ். விஸ்வஜித், கிரேடு ஏ.எஸ்.ஐ கே.டி. மனோஜ், முதுநிலை சிவில் போலீஸ் அதிகாரி அருண் ஜோஷி ஆகிய நால்வரையும் உள்துறை அமைச்சகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஏ.டி.ஜி.பி விஜயன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து டி.ஜி.பி விஜயன் கூறுகையில், "ஜெயபாலகிருஷ்ணனின் பிள்ளைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. இந்த வழக்கில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படியான உரிய நீதி நிலைநாட்டப்படும்" என்று உறுதி அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியையும் அவரது மகனையும் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ அனுமதியைப் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கை வலுவாகக் கொண்டு செல்ல தேவையான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

