காலா : கருப்பும் வெள்ளையும்! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 36
”குமாரு, யாரு இவரு?”
ஒரு அமைச்சரைக் கைநீட்டி, காலா நக்கலாகக் கேட்கும் காட்சி மிக ரசனையான காட்சி. சூப்பர்ஸ்டாரின் தனித்துவமான தருணங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் இந்தக் காட்சிக்கும் ஒரு முக்கியமான இடமிருக்கும்.
ஹரி தாதாவுக்காக தன்னிடம் பஞ்சாயத்துப் பேச வந்திருக்கும் அமைச்சரைப் பார்த்துதான் அப்படிக் கேட்கிறார் காலா. குடித்திருக்கிறார், அதனால் போதையில் இருக்கிறார். ஆனால், தாம் எதற்காக, யாருக்காக இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறோம், யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். உண்மையில் அந்தப் போதையையே அந்தச் சூழலுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
எதிரே இருப்பது அமைச்சர் என்று அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், ’ஓ, அமைச்சரா... வணக்கம் வணக்கம். அமைச்சருக்கு என்ன துறை? சில்லறையெல்லாம் நல்லா வருதா?’ என்று கேட்டுவிட்டு சில விநாடிகளுக்குப் பின்னர்,
”ஆமா, யாரு இவரு?”
என்று மீண்டும் கேட்டு அங்கிருக்கும் அனைவரையும் பதற்றப்படுத்துவார். உண்மையில் அவர் அப்படிச் சொல்வதற்கான பொருள், ”அவனுக்காக வர நீ யாரு, ஏன் அவன் வரமாட்டானாமா?” என்பதுதான். ஆனால், அந்தக் காட்சியின் இறுதியில் ஹரி தாதாவும் அவ்வளவு நேரம் அங்கேதான் இருந்திருக்கிறான் என்பதை அறிய வரும் போது, பார்வையாளர்களான நமக்கு அந்த வசனத்தின் அழுத்தம் பன்மடங்கு எகிறிப்போகும்.
மும்பையில் ஒரு குட்டி தமிழ்நாடு என்று அழைக்கப்படும் தாராவி குடிசைப்பகுதியில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பாகவே, கூலி வேலைகளுக்காக தமிழர்கள் இடம்பெயர்ந்து அங்கே போய் செட்டிலான பகுதி அது. ஒரு காலத்தில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் மும்பையின் வெளிப்பகுதியாக இருந்த தாராவி, பெருநகர வளர்ச்சிக்குப் பிறகு இன்று நகரின் மையப்பகுதியாக மாறியிருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய நகர்ப்புற குடிசைப்பகுதிகளுள் ஒன்றாக தாராவி கருதப்படுகிறது. இப்படியான நிலப்பகுதிகளும், பிரச்சினைகளும் மும்பையில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில், முன்னேறிய நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.

பெருநகரங்களுக்குள் இருக்கும் நிலம் என்றால், அது எப்பேர்ப்பட்ட மதிப்புமிக்க வளம்? நகர மேம்பாடு என்ற பெயரில் அந்த நிலத்தைக் கைப்பற்றி, அந்த மக்களை அப்புறப்படுத்தி, அங்கே உயரமான கட்டடங்களைக் கட்டி வணிகரீதியாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள் அரசியல் சக்திகளும் பெருமுதலாளிகளும். ஆனால், தலைமுறை தலைமுறையாக அங்கே வாழும் மக்களுக்கு அந்த நிலம் என்பது வெறும் சொத்து அல்ல; அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், அடையாளம் எல்லாமும்தான். 2000-க்குப் பிறகு தாராவியை மறுமேம்பாடு செய்வதற்கான திட்டங்கள் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று (2026) அது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதுதான் தாராவி மக்களின் நிஜக் கதை!
இந்த நிஜக்கதையை ஒட்டி, பல சினிமாக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியான ஒன்றுதான். தாராவியின் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார் அங்கேயே வாழும் காலா எனும் கரிகாலன். அவரது அப்பா வேங்கையன் காலத்திலிருந்தே மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் காலா. தாராவி மக்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முயலுகிறான் ஹரி தாதா எனும் அரசியல்வாதி. குடிசைகளை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றித் தருவதாகச் சொல்லும் அவனது திட்டத்தின் பின்னால் இருக்கும் நில வணிக நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை விழிப்போடு வைத்துக்கொண்டு, அவர்களுக்காகப் போராடும் முன்களவீரனாகச் செயல்படுகிறார் காலா.

இந்தப் போராட்டம் வெறும் நிலத்துக்கான மோதலாக மட்டும் நின்றுவிடுவதில்லை. காலாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் ஹரி தாதாவின் அதிகாரம் நுழைகிறது. காலாவின் மனைவியும், மகனும் கொல்லப்படுகிறார்கள். காலாவைத் தனிமைப்படுத்தி அவரது எதிர்ப்பை ஒடுக்க நினைக்கும் அதிகாரத்துக்கும், தங்கள் வாழ்விடத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைகிறது. இந்தப் போராட்டத்தில் காலா எதிர்கொள்ளும் இழப்புகளைத் தாண்டி அவரால் ஹரிக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது என்பதுதான் கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் முதன்முறையாக பார்க்கிறோம். மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என ஒரு பெரிய குடும்பமே சூழ்ந்திருக்க; கைலி, உள்பனியனோடு மிக எளிய தோற்றத்தில் ஒரு கலகலப்பான முதியவராக நடித்திருந்தார். அவரை இப்படியான கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்வான அனுபவமாக இருந்தது. படத்தில், ஓரிரு சண்டைக் காட்சிகள், குடிக்காமல் பொறுப்பாக இருக்கும் அவர் நண்பர்களின் கட்டாயத்தால் குடித்துவிட்டு வீட்டு நிகழ்ச்சிகளில் பாட்டுப் பாடுவது போன்ற டெம்ப்ளேட்டுகளைக் கொண்டிருந்தாலும் இந்தப் படம் ரஜினியின் வழக்கமான படங்களைப் போன்ற ஹீரோயிச முடிவைக் கொண்டிருக்கவில்லை. அதுவும் இந்தப் படத்தைத் தனித்துவமான படமாக்குகிறது.

கரிகாலனின் மனைவி, திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வியாக ஈஸ்வரி ராவ் மிகப் பொருத்தமாக இருந்தார். வெடுக் வெடுக்கென பேசிக்கொண்டு குடும்பத்தை நிர்வகிக்கும் அழகும், கரிகாலனை அவர் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையும், ஹூமா குரோஷியின் பாத்திரம் கதைக்குள் வந்ததும், மனதுக்குள் ஓடும் ஒரு பரிதவிப்புமாக அவர் செல்வியின் கதாபாத்திரத்தை முழுமையாக்கியிருந்தார். கரிகாலனின் முன்னாள் காதலி சரினாவாக, பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷி நடித்திருந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரிகாலனும், சரினாவும் சந்திக்கும் காட்சிகளில் பழைய நினைவுகளில் சிக்கிக்கொண்டு இருவரும் தவிப்பதும், சீக்கிரமே அரசியல் காரணங்களால் இருவரும் உணர்வுகளை விடுத்து முரண்பட்டுக்கொள்வதும் என ரஜினிகாந்தும், ஹூமாவும் அந்தப் பாத்திரங்களில் தங்களின் தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள்.

ஹரி தாதாவாக நடித்த நானா படேகர், தனது நுணுக்கமான நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருந்தார். அவரது பேச்சும், நடையும், முகபாவமும்... பார்த்தாலே நமக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தன. சமுத்திரக்கனி, மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், திலீபன், நிதிஷ் வீரா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
தொடர்ந்து ரஞ்சித்தின் பெரும்பாலான படங்களில் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணனே, இந்தப் படத்துக்கும் இசையமைத்திருந்தார். சந்தோஷின் சென்சிடிவான பின்னணி இசைப் பங்களிப்பு பிரமாதமாக அமைந்திருந்தது. ரஜினிகாந்துக்கான தீம் இசை அவரது ஈர்ப்பை திரையில் பன்மடங்கு உயர்த்திக் காண்பித்தது. பிரதீப்குமார், தீ, அனந்து பாடிய ’கண்ணம்மா’ பாடலும், டோபடெலிக்ஸ் குழுவினரின் ராப் பாடல்களும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டாலும், மொத்த கிளைமாக்ஸையும் தாங்கிப் பிடித்தது ’ஒத்தை தல ராவணா’ பாடல்தான். அதை இணைந்து எழுதியது கபிலன், அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜம்ராக். இணைந்து பாடியது யோகி.பி, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜம்ராக்!
ஒளிப்பதிவாளர் முரளி.ஜி இதுவரை நான்கு தமிழ்ப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நான்குமே பா. ரஞ்சித்தின் படங்கள்தான். கதையோடும், அதன் உணர்வுகளோடும் ஒத்திசைந்து இயங்கும் அவருடைய பங்களிப்பு அத்தகையது. மழை நேரத்தில், பாலத்தின் மீது காலா, விஷ்ணு ஆட்களோடு மோதும் சண்டைக் காட்சி ஒரு காட்சியனுபவம்!

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக தனுஷ், லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக சுபாஷ்கரன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்கள். கதை, திரைக்கதை எழுதி, படத்தை இயக்கியிருந்தவர் பா. ரஞ்சித். வசனம் எழுதியது ரஞ்சித்தோடு இணைந்து பி.எம்.மகிழ்நன் மற்றும் ஆதவன் தீட்சண்யா.
ரஞ்சித்துக்கு கபாலிக்குப் பிறகு ரஜினிகாந்தோடு அவருக்குத் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாவது படம் இது. ரஜினிகாந்தின் நட்சத்திரப் பிம்பத்தைத் தக்கவைத்தபடியே, அவரை ஒரு வெளிப்படையான அரசியல் கருத்தைப் பேசும் கதையில் பொருத்தியவர் இயக்குநர் பா. ரஞ்சித்! முடிந்தவரை சூப்பர்ஸ்டாரின் கமர்ஷியல் ஆளுமையை மனதில் வைத்தே இந்தப் படத்தின் திரைக்கதையையும் உருவாக்கியிருந்தாலும், படத்தின் முடிவில் தனது அரசியல் பார்வைக்கே முன்னுரிமை அளித்தார்.
ஹரி போன்றவர்களின் அதிகாரப்பசிக்கு எதிராக ’நிலம் எங்கள் உரிமை’ எனும் முழக்கத்தைத் தாராவி மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும் பதிக்கிறார் காலா. அந்த ஆபத்தை உணர்ந்து கரிகாலனை சுட்டுக் கொலை செய்துவிடுகிறான் ஹரி தாதா. இதுவே அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் எளிய போராளிகளின் உண்மையான நிலைமை. நிதர்சனம்! இப்படி ஒரு முடிவைப் பொதுவாக ரஜினி படங்களில் பார்க்க முடியாது.
அதன் பின்னர், ஹரி தாதா தனது நோக்கமான தாராவியை அழித்து, அங்கே கட்டுமான வேலைகளைத் தொடங்குவதற்கான பூஜைக்காக வருகிறான். ஆனால், காலா இல்லாவிட்டால் என்ன? கருத்துகளால் உருவாக்கப்படும் படைவீரர்கள் அனைவரும் காலாதான் எனும் உருவகமும், உண்மையும் அப்போது வெளிப்படுகிறது. மக்களைக் காப்பதற்கும், அவர்களுக்கான நீதியை வென்றெடுப்பதற்கும் ஒரு தனிமனிதனோ, ஹீரோவோ மட்டும் போதாது; மக்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாங்களே ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதுதான் படத்தின் அடிப்படைச் செய்தி.
அதனால்தான் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தோன்றி நடித்தது முக்கியத்துவம் பெறுகிறது. கிளைமாக்ஸில் வரும் ’ஒத்த தல ராவணா’ பாடலும் அந்த உணர்வுப்பூர்வமான செய்தியைத்தான் வெளிப்படுத்துகிறது. தூய்மையின் அடையாளமாகக் கட்டமைக்கப்பட்ட வெண்மைக்கு எதிராகக் கருப்பு, சிவப்பும், நீலம் மூன்று வண்ணமும் திரையில் பரவ,
’உன்னிடம் உள்ளதெல்லாம் தேடித் தெரிந்திடு
உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடித் திரிந்திடு
உன்னையும் மண்ணையும் வென்று வா’
என்று உரிமையைக் காப்பதற்கான வலிமையைத் தரக்கூடிய அறிவை அடைந்திடுக எனும் வரிகள் ஒலிக்கின்றன. அதைத்தான் பெரியாரும், மார்க்ஸும், அம்பேத்கரும் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


