`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ - மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா தன் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
சிறுவன் முத்துவேலன் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே 11:00 மணியளவில் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் தேடிவிட்டு, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து காவல்துறையினரும் மக்களுடன் சேர்ந்து சிறுவனைத் தேடினர்.
இன்றும் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, சிறுவன் முத்துவேலனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சிறுவனின் கழுத்தில் கயிறு தழும்பு இருந்தது. வாயில் ரத்தம், கண்ணிற்குக் கீழ் கருமை நிறத்தில் காயம் இருப்பதால்... சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது தெரிகிறது. காவல்துறையினர் புகாரளித்த உடனே இன்றுபோல் தீவிரமாகத் தேடியிருந்தால் சிறுவனை மீட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் காவல்துறையினர் எங்களை தேடச் சொன்னார்கள். முத்துவேலனின் இறப்பிற்கு காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும், அதுவரை அவனுடைய உடலை வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


