கேரளம்: பீஃப்-க்கு எதிரான வீடியோ; மத வெறுப்பைப் பரப்பிய வட இந்தியா Vlogger; வழக்கு பதிந்த போலீஸ்
வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் அம்ரித் சிங் டேரன்.
இவர் கேரளா பயண வீடியோவைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கேரளாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு அரபு நாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்று கேரளாவில் இஸ்லாமியத்தைப் பரப்ப உதவி செய்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
அது மட்டுமிலாமல், கேரளாவில் உள்ள காசி ஆர்ட் கேஃபே உணவகத்தில் மகாத்மா காந்தியுடன் முகமது அலி ஜின்னாவின் வெள்ளி உருவச்சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு பீஃப் கறி பரிமாறப்படுவதாகவும் வீடியோவில் பேசியிருந்தார்.
காசி உணவகம்
மேலும் அந்த உணவகத்தின் பெயர் இந்துக்களின் புனிதத் தளமான காசியின் நினைவாக வைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார். இது பொய்ச் செய்தியாகும்.
அடுத்ததாக, கொச்சி துறைமுகத்தில் முஸ்லிம்கள்தான் அதிகம் உள்ளனர். அவர் ஆதிக்கத்தில் அந்தத் துறைமுகம் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
இதையடுத்து அம்ரித் சிங் டேரன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக கொச்சி துறைமுகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சதீஷன் பதிவு
இந்த வீடியோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளா முதலமைச்சர் சதீஷன் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரளம் எப்போதும் ஒற்றுமையுடன் உறுதியாக நிற்கிறது. மத வெறுப்பிற்கு இங்கு இடமே இல்லை.
நமது ஃபோர்ட் கொச்சி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பவும், நமது மாநிலத்தை எதிர்மறையாகச் சித்தரிக்கவும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீடியோ பதிவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; சட்டம் தனது கடமையைச் செய்யும். பயமோ பாரபட்சமோ இன்றி, மத நல்லிணக்கத்தையும் நீதியையும் பாதுகாப்பதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு உறுதியுடன் உள்ளது.
கடவுளின் சொந்த நாட்டிற்கு இது ஒரு புதிய யுகம். வெறுப்பிற்குச் சிறிதும் இடமில்லை. நமது மத நல்லிணக்கத்தை யாராவது சீர்குலைக்க நினைத்தால் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பினராயி விஜயன் பதிவு
கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், “ஃபோர்ட் கொச்சியும் வர்க்கலாவும் கலாசாரங்கள் சங்கமிக்கும், வரலாறுகள் பின்னிப் பிணைந்த, பன்முகத்தன்மை செழித்து வளரும் இடங்கள்.
ஆனால், லாபத்திற்காக வெறுப்பை வியாபாரம் செய்யும் ஒரு வீடியோ பதிவர், இந்த இடங்களுக்கு மதச்சாயம் பூச முயல்கிறார்.
கேரளத்தைப் பிரிக்கத் தவறிய சங் பரிவார், தனது வெறுப்புப் பிரச்சாரத்தை இணையவழி தூண்டுபவர்களிடம் ஒப்படைத்துச் செயல்படுத்துகிறது.
ஆனால், கேரளத்தின் மதச்சார்பற்ற ஆன்மா அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு ஒருபோதும் தலைவணங்காது. சமூகங்களிடையே மதப் பகையைப் பரப்புபவர்கள் மீது மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


