ஊட்டி கனமழை: போக்குவரத்து நிறுத்தம், 24*7 கட்டுப்பாட்டு மையம் - மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்புகள்
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான சேதம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (23.10.2026) இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும்வரை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல்வேறு இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், அணைகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம்.
வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி இருங்கள். நிலச்சரிவுகள், மரங்கள் விழுதல், பாறைகள் சரிதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புடன் இருங்கள்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளைப் பின்பற்றவும். மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவையைத் தவிர பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மழை குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்தக்கூடாது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் மழை பெய்யும்போது, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம். அடுத்த மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, TNSTC சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது:
உதகை கோட்டம்: 0423-2445577
குன்னூர் கோட்டம்: 0423-2206002
கூடலூர் கோட்டம்: 04262-261296
உதகை வட்டம்: 0423-2442433
குன்னூர் வட்டம்: 0423-2206102
கோத்தகிரி வட்டம்: 04266-271718
குந்தா வட்டம்: 0423-2508123
கூடலூர் வட்டம்: 04262-261252
பந்தலூர் வட்டம்: 04262-220734
அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு லட்சுமி பவ்யா தன்னீரு மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


