இதனால்தான் நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டோம் - வெளியான தகவல்

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் காயம் அடைந்தார். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய 7 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரயிலில் தப்பி சென்ற மூவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிடிபட்டனர். துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரித்தபோது, 2022ம் ஆண்டு ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வின் போது டைகர் ஷெராஃப் நடிகர் சல்மான் கானைப் புகழ்ந்து பேசியதற்காக, அவரை பழிவாங்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். ‘ஹீரோபந்தி 2’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியின் போது, ​​வழக்கமாக சல்மான் கானின் படங்கள் வெளியாகும் ஈத் பண்டிகை நாளில் இந்தப் படம் வெளியாகவிருப்பது குறித்து டைகர் ஷெராபிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

டைகர் ஷெராப்

அதற்கு அவர், “இந்தத் திரையுலகில் ஒரே ஒரு ‘டைகர்’ (புலி) தான் இருக்கிறார், அவர் சல்மான் சார். அவருக்கு முன்னால் நான் வெறும் பூனைதான். நான் ‘சிம்பா’ (Simba) — அதாவது ஒரு புலிக்குட்டி...” என்று பதிலளித்தார். இந்த நகைச்சுவையான கருத்து, சமூக ஊடகங்களில் வைரலானது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பூல் சிங் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்றும், ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் டைகர் ஷெராப் கருத்துக்குப் பழிவாங்க விரும்புவதாகத் இவ்வழக்கில் முக்கிய சதிகாரருமான அனில் பண்டிட் தன்னிடம் கூறியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்று குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். முன்னதாக, இத்தகைய தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்பதாக இக்கும்பல் குறிப்பிட்டு இருந்தது.

1998-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாய் மான் வேட்டை வழக்கு தொடர்பாக, சல்மான் கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தக் கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானுடன் தொடர்புடைய நபர்களுக்கு ஏற்கனவே மிரட்டல்களை விடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பண்டிட் மற்றும் மற்றொரு கும்பல் உறுப்பினரான ஹர்மன் சாந்து ஆகியோருடையவை எனக் கூறப்படும் ஆடியோ மிரட்டல்களில், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படத் துறையினரும் இலக்கு வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் டைகர் ஷெராப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் அந்த நடிகரும் அவரது தந்தை ஜாக்கி ஷெராஃபும் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என்று மறுத்துள்ளனர்.

சல்மான் கானிடமிருந்து விலகி இருக்குமாறு தனக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறி, அந்தக் கும்பலுடையது எனக் கூறப்பட்டுப் பரப்பப்பட்ட ஒரு ஆடியோ செய்தி இருந்தபோதிலும், திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் தனக்கு அச்சுறுத்தல்கள் வரவில்லை என்று மறுத்திருந்தார். அந்தக் கும்பல் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆமிர் கான் மற்றும் ஆயுஷ் ஷர்மா ஆகியோரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.