வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு; தாய் காயம் - சாத்தூர் சோகம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெய்த பலத்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் மாணவியின் தாயும் காயமடைந்துள்ளார்.
மேட்டமலை பகுதியில் செல்வம் – சோலையம்மாள் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இவர்களது மகள் முத்துசெல்வி, 17 வயதான இவர், சின்னக்காமன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை முதல் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக, மேட்டமலை பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, பழமையான வீட்டில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரவு சுமார் 11 மணியளவில் வீட்டின் நடுப்பகுதிச் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதில் தூங்கிக் கொண்டிருந்த மாணவி முத்துசெல்வி இடிபாடுகளில் சிக்கிப் பலத்த காயமடைந்தார்.
அவரது தாயார் சோலையம்மாளுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆட்டோ மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவி முத்துசெல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை பெய்து வரும் நிலையில், பழமையான வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
