ராஜ ராஜ சோழன் சதய விழா: ஆப்சென்ட்டான அமைச்சர்... தவெக ஆட்சியிலும் தொடர்கிறதா சென்ட்டிமென்ட்?

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயுரந்த விமான கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சியளித்து வருகிறது. இன்றைக்கும் பெரிய கோயில் கட்டுமானம் குறித்து உலகம் முழுதும் அதிசயிக்கின்றனர். எவ்வித தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் மாமன்னன் ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை எழுப்பிய அதன் கட்டுமானம் வியப்பில் ஆழ்த்துகிறது. பெரிய கோயில் மூலம் தமிழர்களின் திறமையும், பெருமையும் உலகம் முழுக்க பரவியுள்ளது.

ராஜ ராஜ சோழன்

குடவோலை மூலம் வாக்கெடுப்பு முறையை அறிமுகம் செய்து மிகச் சிறந்த மக்களாட்சி முறைக்கு வித்திட்ட ராஜ ராஜ சோழன், நீர் மேலாண்மையில் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்தி நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார். சிறப்பு மிக்க ஆட்சி செய்த ராஜ ராஜ சோழனுக்கு அவர் பிறந்த சதய நட்சத்திர தினத்தில் பிறந்த நாள் விழா சதய விழாவாக ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று 1,041வது சதய விழா மங்கள் இசையுடன் தொடங்கியது. மாலை நடந்த 1,041 பேர் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி, விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் இன்று நடைபெறுகிறது. பெரிய கோயில் வெளியே வலது புறத்தில் உள்ள ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ரேவதி மாலை அணிவித்து மரியாதை செய்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் எம்.எல்.ஏ விஜய் சரவணன், சதய விழாக் குழு தலைவர் சரவணன், அறங்காவலர் போன்ஸ்லே உள்ளிட்ட பலர் மாலை அணித்தனர். இதில் எஸ்.பி சுந்தரவதனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகோயில்

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 122 அமைப்புகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி கொடுத்திருப்பதால் இந்த நிகழ்ச்சி முடிவதற்கு மாலைக்கு மேல் ஆகலாம் என்கிறார்கள். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பல்வேறு திரவிய பொருள்களால் பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு மனமுருக வேண்டினர்.

பெரிய கோயிலில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டால் பதவி பறிபோகும் என்கிற சென்ட்டிமென்ட் பரவியிருப்பதால் திமுக-வினர் பெரிய கோயிலுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார்கள். கடந்த ஆட்சியில் கோயில் வளாகம் வரை வந்து விட்டு உள்ளே செல்லாமல் அப்போதைய அமைச்சர்களான நேரு, சேகர் பாபு உள்ளிட்டவர்கள் திரும்பிச் சென்ற சம்பவங்கள் நடந்தன.

சதய விழா

சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தாலும் திமுக-வில் அமைச்சராக இருந்தவர்கள் கோயிலுக்குள் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். இந்த சென்ட்டிமென்ட்டை இப்போது தவெக அமைச்சர் வினோத் கடைபிடிக்கிறாரா எனப் பேசி வருகிறார்கள். சதய விழாவில் அமைச்சர் வினோத் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முக்கிய நிகழ்வான இன்றுகூட அவர் கலந்து கொள்ளாதது ஏன், திமுக-வினரை இதில் ஃபாலே செய்கிறாரா என முணுமுணுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.