கார்த்திகா கைது விவகாரம்: திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை! – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்கு கண்டனங்கள் எழுந்தன.

கார்த்திகா

குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?

கடந்த காலங்களில் கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது என்றும் நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், "ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய – திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.

அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக் கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரைத் தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக, அநாகரிகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.

சீமான், ஸ்டாலின்
சீமான், ஸ்டாலின்

அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமைதான் சீமான்.

இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் ஏற்கும்; பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என்று காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.