Ramayana: ``ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம்; ஆனால்... - ராமாயணா குறித்து சாய் பல்லவி
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகை சாய் பல்லவி,``மீண்டும் சென்னையில், அதுவும் நமது சொந்த மண்ணில் இந்த நிகழ்வு நடப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இந்த நாளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்.
ரஹ்மான் சார் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறார். என் வாழ்க்கையின் சில தருணங்கள் எனக்கு மறந்திருக்கலாம். ஆனால், அவரின் பாடலைக் கேட்கும்போது நம் பால்யகால நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்துவிடும். ரஹ்மான் சார் அற்புதமான இசையைப் படைப்பதற்கும், எங்களது தனிமையான நாட்களிலும், சோகம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களிலும் உங்கள் இசையால் உடனிருப்பதற்கும் மிகப்பெரிய நன்றிகள்.
நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. ஆனால், ஒவ்வொரு டப்பிங்கின்போதும் அது அந்த மொழிகயில் எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள அனைவரும் ராமாயணம் காவியத்தைத் தங்களின் சொந்த தாய்மொழியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்காக படக்குழு போட்ட உழைப்புக்கும் அர்ப்பணிப்பிற்கும் 100 மடங்கு அதிகமான வெற்றியும் அன்பும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
இந்த மாபெரும் திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதிலும், என் அன்பிற்குரிய ரகுல் பிரீத் சிங்குடன் மீண்டும் திரையைப் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி. அவர் உணர்வுகளையும், அழகையும் கம்பீரத்தையும் மிகச் சரியாக வெளிப்படுத்தி மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் என்னைச் சந்திக்கும் போதெல்லாம், தென்னிந்திய சினிமா பற்றிய தகவல்களை எனக்கு கூறுவார்.
அவருக்கு தென்னிந்தியத் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். அதைத் தவறாமல் பார்த்துவிட்டுத் பாராட்டுதலையும் அன்பையும் ஏதேனும் ஒரு வழியில் தெரிவிப்பார். அவருடன் இந்தப் படத்தின் திரை அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது.
அவர் நடிப்பை நேரில் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகர் யாஷ்... அவர் இருக்கும் இடம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கே.ஜி.எப் முதல் டாக்ஸிக் வரை அவர் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் அதே அர்ப்பணிப்புடன், ஈடுபாட்டுடன் இருக்கிறார். அவரின் நடிப்பும், தாக்கமும் படத்தில் நிச்சயம் பேசப்படும்.
நாம் அனைவரும் ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், இதில் உள்ள காட்சிகள் மற்றும் வடிவமைப்பு மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து உலகிற்குச் சொல்லப் போகும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் நாம் பெருமைப்படலாம். எந்த இடத்திலும் சமரசம் செய்யாமல், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் சண்டைப் பயிற்சி அமைப்பாளர்களைக் கொண்டு இந்த முழு குழுவும் இணைந்து உழைத்திருக்கிறது.
இந்தப் படம் உங்கள் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம். இந்தியாவில் எங்களின் புரொமோஷன் இன்றுடன் முடிகிறது. அந்த இறுதி நிகழ்வு என் தாய்மண்ணான தமிழ்நாட்டில் நடப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.