ஓவியப் பயிற்சி முதல் பேச்சுத்துணை வரை முதியோருக்கு மரியாதை... முன்னெடுக்கும் காவ்யா!
தொழில்நுட்பமும் நகரமயமாக்கலும் அதிவேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், மனிதர்களை அச்சுறுத்தும் அமைதியான நோயாக உருவெடுத்துள்ளது தனிமை. உலகளவில் தனிமையால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் நிலையில், நம் வீடுகளில் இருக்கும் முதியவர்களே இந்தத் தனிமைத் துயருக்கு அதிகளவில் ஆளாகிறார்கள். முதுமையில் தனிமை என்பது வாழ்வின் பெருந்துயரம். அந்தத் துயரத்தின் துளியையாவது துடைக்கும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த காவ்யா.
ஹைதராபாத் ஐஐடி-யில் இன்டராக்ஷன் டிசைன் படித்து வருகிறார் 23 வயது காவ்யா. முதியவர்களின் தனிமைத் துயர் போக்க, அவர்களுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சி அளிப்பது, அன்றாடத் தேவைகளுக்கு உதவுவது, அவர்களுடன் உரையாடுவது எனத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். இந்த முயற்சியின் பின்னணி, அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிப் பேசுகிறார் அவர்.
“வயசானவங்க ஒரு கட்டத்துல தனிமையை உணர ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்கு ஆதரவா நாலு வார்த்தை பேசவும், ‘நாங்க இருக்கோம்’னு நம்பிக்கை கொடுக்கவும் ஆட்கள் தேவை. சின்ன வயசுல நம்மை அன்போட பார்த்துக்கிட்ட தாத்தா, பாட்டியை, அவங் களுக்கு வயசான பிறகு நாமதானே பார்த்துக்கணும். அந்த அன்பும் அக்கறையும் அவங்களோட முதுமைக் காலம் முழுக்கத் தேவை. அதுக்கான முயற்சியை நம்ம வீட்டுல இருந்தே தொடங்கணும்.
தாத்தா, பாட்டிகூட வளர்ந்த, வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. நாங்க இல்லைன்னா, ‘வீடே வெறுமையா இருக்கு’னு பாட்டி சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா, அவங்க சொன்ன வார்த்தைகளோட அழுத்தம் அந்த வயசுல எனக்குப் புரியல. ரெண்டு பேரையும் இழந்த பிறகுதான் அந்த வெறுமையை உணர முடிஞ்சது. வயசாவனங்க சார்ந்து என்னை இயங்க வெச்சதுல இன்னொரு விஷயமும் இருக்கு” என்ற காவ்யா, அந்தச் சம்பவத்தையும் பகிர்ந்தார்.

“எங்க ஏரியாவுல ஒரு பாட்டி இருக்காங்க. அவங்களைப் பார்த்துக்க யாரும் இல்லை. அவங்களுக்கு மூட்டுல அறுவைசிகிச்சை நடந்துச்சு. முதல் 15 நாள்கள் ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க. அப்புறம் வீட்டுக்கு வந்தவங்க, எழுந்து நடக்க முயற்சி பண்ணபோது கீழே விழுந்துட்டாங்க. அதனால, திரும்பவும் மூட்டுல அடிபட்டு, மறுபடியும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிடுச்சு. அவங்ககூட யாராவது இருந்து பார்த்துக்கிட்டிருந்தா, இப்படி நடந்திருக்காதுல்லனு தோணுச்சு.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் வயசான வங்களுக்கு ஏதாவது பண்ணணும்ங்கிற முடிவுக்கு வந்தேன். வயசானவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை செய்யப் போறேன்னு வீட்டுல சொன்னப்போ, `அதிகப் பிரசங்கினு திட்டாம, அப்பா, அம்மா ரெண்டு பேருமே சந்தோஷப்பட்டாங்க. எங்க அம்மா கிராஃப்ட் டீச்சர். அதனால சின்ன வயசுல இருந்தே எனக்குப் பெயின்டிங், கிராஃப்ட் மேல ஆர்வம் அதிகம். இளங்கலை விஷுவல் ஆர்ட்ஸ் முடிச்சிருந்தேன். என்னோட படிப்பு சார்ந்தே ஏதாவது செய்யலாம்னு முதல்ல நினைச்சேன். வயசானவங்களுக்கு ஒரு வொர்க்ஷாப் நடத்தலாம்னு யோசிச்சேன்.
முதல்ல முதியோர் இல்லத்துக்குப் போகலாம்னுதான் தோணுச்சு. ஆனா, அவங்க இருக்கிற சூழல்லேயே இல்லாம, வெளியுலகத் துக்கும் வந்து மத்தவங்களோட கலந்து பழகணும்னு நினைச்சேன். அதனால சின்னச் சின்ன ஹோட்டல்கள்ல இலவசமா பெயின்டிங் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். ‘ஓவியங்கள் வரையும்போது மன அழுத்தம் குறையுது, கை நடுக்கம்கூடக் கொஞ்சம் குறையுது’னு சிலர் என்கிட்ட சொன்னாங்க. அதனால தொடர்ந்து இதைச் செய்ய ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் அப்பா - அம்மா சப்போர்ட்ல சென்னையில அஞ்சு இலவச ஓவியப் பயிற்சிகள் நடத்தி இருக்கேன்.

வயசானவங்ககூட நெருக்கமா பழகும்போது தான், அவங்களுக்கு டெக்னாலஜி சார்ந்த உதவிகளும் தேவைப்படுறதுனு புரிஞ்சுக் கிட்டேன். ஹாஸ்பிட்டல் அப்பாயின்ட்மென்ட் வாங்குறது, ஆன்லைன்ல பேமென்ட் பண்றது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அவங்க மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் மேல டெய்லி யாராவது ஒருத்தர் அவங்ககூட பேசுனா நல்லா இருக்கும்னு சொல்றதைக் கேட்டேன். ஏதோ ஒண்ணு பண்றதுக்கு பதிலா அவங்களுக்குத் தேவைப்படுற உதவிகளைப் பண்ணலாமேன்னு தோணுச்சு.
முதல்ல எங்க வீட்டுப் பக்கத்து வீட்ல இருந்த தாத்தா, பாட்டிகளுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்ய ஆரம்பிச்சேன். அப்புறம் எங்கத் தெருவுல இருக்கிற வயசானவங்களுக்கும் உதவி செய்ய ஆரம்பிச்சேன். இப்போ நாங்க இருக்கிற ஏரியாவுல உள்ள வயசானவங்களுக்கு நானும் என் நண்பர்களும் சேர்ந்து முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுட்டு இருக்கோம். ஆனா, அவங்களுக்கு எங்க மேல நம்பிக்கை வர்றதுதான் பெரிய சவாலா இருக்கு. ஆனாலும், முதல்கட்ட முயற்சியா ஹைதராபாத் ஐஐடி-யில `சில்வர் சர்கிள் (Silver Circle) என்ற பேர்ல முதியவர் களுக்கான ஆதரவு மற்றும் தோழமையை மையமா கொண்ட ஒரு சேவை வடிவமைப்பு முயற்சிக்கான பேப்பர் சப்மிட் பண்ணியிருக்கேன். இளைய தலைமுறையினரை முதியவர்களோட இணைக்குறதுதான் நோக்கம். இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக, சில அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள்கிட்ட பேசிட்டு இருக்கேன். வயசானவங்க யாரையும் தனியா விட்டுடக் கூடாது. வாழற கடைசி நாள் வரை அவங்களுக்கு நம்ம ஆதரவு இருக்கணும்...”
- சின்ன வயதில் பெரிய கனவுகள் வைத் திருக்கிறார் காவ்யா.
முதுமைக்கு மரியாதை செய்வோம்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


