எழுத்துகளின் நண்பன்! - பழைய பேனாக்களுக்குப் புத்துயிர் தரும் மதுரை தாத்தா

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயில் அருகே, நவீன் பேக்கரி பக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பேனா விற்பனை செய்து வருகிறார் எட்டாம் வகுப்பு வரை படித்த சீனிவாசன் தாத்தா. சிறிய அளவில் தொடங்கிய இவரது பேனா வியாபாரம், இன்று பழைமையான பேனாக்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கும், பேனா பழுது நீக்க விரும்புபவர்களுக்கும் நம்பிக்கைக்குரிய இடமாக மாறியுள்ளது.

தனது தந்தை செய்து வந்த பேனா வியாபாரத்தை விடாமல் தொடர்ந்து செய்து வரும் சீனிவாசன், கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய வகை பேனாக்களையும் விற்பனை செய்து வருகிறார். பேனா விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், பழுதடைந்த பேனாக்களைப் பழுது நீக்கியும் கொடுத்து வருகிறார்.

பார்க்கர் பேனா, ஜெர்மன் பேனா, அமெரிக்கா பேனா, பழைமையான வாட்டர் பேனா, சீப்பர் பேனா எனப் பல்வேறு வகையான பேனாக்கள் இவரிடம் கிடைக்கின்றன. பழைமையான பேனாக்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய மற்றும் டிரெண்டிங் வகை பேனாக்கள் வரை பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறார்.

சீனிவாசன் தாத்தா

ரூ.50 முதல் ரூ.1,500 வரை பல்வேறு விலை கொண்ட பேனாக்கள் இவரிடம் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட வகை பேனாவைக் கேட்டாலும், அதைத் தேடி சுமார் நான்கு நாள்களுக்குள் வாங்கிக் கொடுத்து வருகிறார். இங்கு ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் மாணவர்கள் விரும்பி பேனா வாங்கியும் பழுது நீக்கியும் செல்கின்றனர். பழுது நீக்க குறைந்தபட்சம் 30 ரூபாய் ஆகும்.

தொழில்நுட்ப வளர்ச்சியும், எழுதும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் ஏற்பட்டு வரும் போதிலும், பேனா வியாபாரத்தை மட்டும் சீனிவாசன் தாத்தா கைவிடவில்லை. தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட தொழிலை இன்றளவும் தொடர்ந்து செய்து வருவது அவரது தொழில் மீதான பற்றையும், பாரம்பர்யத்தைப் பாதுகாக்கும் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.

இன்றைய காலத்தில் பேனாக்களை சாதாரண எழுது பொருளாக மட்டுமே பலர் பார்க்கும் நிலையில், பல தலைமுறைகளைக் கடந்து வந்த பழைமையான பேனாக்களைப் பாதுகாத்து, அவற்றை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறார் சீனிவாசன் தாத்தா.

“எந்த வகையான பேனா கேட்டாலும் முடிந்தவரை தேடி வாங்கிக் கொடுப்பேன்” என்ற இவரது அணுகுமுறையே, பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளது.

மதுரையின் பரபரப்பான வீதிகளில் நவீன விற்பனை முறைகள் பெருகிவரும் நிலையில், 50 ஆண்டுகளாக பேனாவையே தனது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, தந்தையின் தொழிலை தொடர்ந்து வரும் சீனிவாசன் தாத்தா, பாரம்பர்ய சிறு வணிகத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.